மகளிர் அணிகளுக்கு இடையிலான டிவிஷன் – I கால்பந்து சுற்றுத் தொடரில் நடைபெற்று முடிந்த போட்டியொன்றில், இறுதிக் கட்டத்தில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட இலங்கை கடற்படை மங்கைகள், எதிரணியான பொலிஸ் மகளிர் அணியை அவர்களது சொந்த மைதானத்தில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

மழையால் தள்ளிப்போன இராணுவ விளையாட்டு கழகத்தின் வெற்றி

பெண்களிற்கான டிவிஷன்-I வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டித்தொடரின் பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில்…

ராணுவப்படை மகளிர் அணியுடன் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்த பொலிஸ் மகளிர் அணி, இந்த போட்டியினை சொந்த மைதான சாதங்களுடன் வெற்றி கொள்ள வேண்டும் என்கிற அவாவுடன் விருந்தினர் கடற்படை மகளிர் அணியினை எதிர்கொண்டது.

போட்டியின், ஆரம்பத்தில் கோணர் வாய்ப்பு ஒன்றினை பெற்றுக்கொண்ட கடற்படை மகளிர் அணியின் மாதுக்கி பெரேரா அதனை லீலான்தி டேனியல் மூலம் கோலாக மாற்ற நினைத்தார். எனினும், பொலிஸ் கோல் காப்பாளர் தனது கடமையை சிறப்பாக நிறைவேற்றி கடற்படையின் கோல் பெறும் முயற்சியினை முறியடித்தார்.

கடற்படை மகளிர் அணி, பின்னர் பலவீனமாய் இருந்த பொலிஸ் பாதுகாப்பு வலயங்களிற்குள் தமது முன்கள வீராங்கனையான துஷானி மதுசிக்கா மூலம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பொலிஸ் அணியும் கடற்படையின் நடவடிக்கைகளுக்கு பதில் கொடுக்கும் வகையில் லக்ஷனி அனுருத்த மூலம் எதிர் தாக்குதல்களை மேற்கொண்டது. லக்ஷானி மூலம் வைக்கப்பட்ட இலக்குகள் குறி தவறிய காரணத்தினால் அவர்களது வாய்ப்புகள் பயனற்றுப் போனது.

பின்னர், ஒரு தடுப்பு அரணை அமைத்து எதிரணியான கடற்படையினை தமது நான்கு அங்கத்தவர்கள் மூலம் பாதுகாப்புத்துறை சமாளிக்க முயன்று, அதில் வெற்றியும் கண்டது.

எனினும், அதற்கு நீண்ட நேரத்தின் பின்னர் அவர்களது தடுப்பு அரணில் இருந்து பந்தினைப் பெற்றுக்கொண்ட துஷானி மாதுக்கி கோல் காப்பாளரை ஏமாற்றி போட்டியின் முதல் கோலினை பெற்றுக்கொண்டார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 1 கடற்படை விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பத்திலும், முதல் பாதி போன்று கடற்படையின் ஆதிக்கமே காணப்பட்டது. எனினும், பொலிஸ் அணி தமது தடுப்புக்கள் மூலம் கடற்படைக்கு அழுத்தம் தருவதினை நிறுத்தவில்லை.

இரண்டாம், பாதியின்  முதல் நிமிடங்களில் லீலான்தியினால் பரிமாற்றப்பட்ட பந்தினை, ருஷானி குணவர்தன வேகமாக கோலினை நோக்கி உதைத்து கோல் பெறும் முயற்சியில் இறங்கினார். எனினும், சிறந்த கோல் காப்பினால் அந்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பந்தின் ஆதிக்கத்தினை கடற்படையே வைத்திருந்தது. சில நேரங்களில் பொலிஸ் தரப்பு சில செயற்பாடுகள் மூலம் ஆதிக்கத்தினை தம்மிடையே கொண்டுவர முயற்சித்திருந்தும் சரியான தடுப்பு அரண் இல்லாத காரணத்தினால் முயற்சிகள் வீணாகின.  

பின்னர் கடற்படை அணிக்கு கிடைத்த ஒரு ப்ரீ கிக் வாய்ப்பின்போது, அந்த உதையை திலினி ஜயசிங்க பெற்றார். அவரது உதை நேரடியாக கோல் காப்பாளருக்கு செல்ல, கோல் காப்பாளரின் மேலில் பட்ட பந்து மீண்டும் திரும்ப, அதனை சித்ராணி கோலாக்கினார்.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டு கழகம் 0 – 2 கடற்படை விளையாட்டு கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகிதுஷானி மதுசிக்கா (கடற்படை விளையாட்டுக்கழகம்)

கோல் பெற்றவர்கள்

கடற்படை விளையாட்டுக் கழகம்துஷானி மதுசிக்கா 42’, சித்ரானி சருக்காலி 80’

மஞ்சள் அட்டைகள்

கடற்படை விளையாட்டுக் கழகம்திலினி ஜயசிங்க 45+2’