ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு மேலும் இரு பதக்கங்கள்

203

ஜப்பானின் கிபு நகரின் நகரகவா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது நாளான இன்றைய தினம், இலங்கை அணி ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் டில்ஷி ஷியாமலி குமாரசிங்க வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தனர். அத்துடன், இவ்விரண்டு வீராங்கனைகளும் தமது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதிகளையும் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு 4 பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு

இதேநேரம், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வா, ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பசிந்து கொடிகார மற்றும் அருண தர்ஷன தலைமையிலான 4 x 400 இலங்கை அணியும் தத்தமது தகுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.

இந்நிலையில், ஜப்பான் நேரப்படி இன்று பிற்பகல் 1.25 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியைச் சேர்ந்த பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, போட்டித் தூரத்தை 10 நிமிடங்களும் 21.54 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகவும் பதிவாகியது.

இப்போட்டியில் சீனாவின் வன்ஹுவா டியன் (10 நிமி. 28.24 செக்.) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்ததுடன், ஜப்பானின் யுகா நொசுஇ (10 நிமி. 38.30 செக்.) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி, முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை 16 வயதுக்குட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடியுள்ள பாரமிக்கு, 2020இல் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ;ட மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் தொடரிலும் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், பாரமி பெற்ற இந்த வெற்றியுடன் அடுத்த மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ;ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். எனினும், அதே காலப்பகுதியில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளிலும் பாரமி வசந்திக்கு பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.


டில்ஷிக்கு இரண்டாவது பதக்கம்

டில்ஷி ஷியாமலி குமாரசிங்க

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணியின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான டில்ஷி ஷியாமலி குமாரசிங்க, பலத்த போட்டிக்கு மத்தியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதற்காக அவர் 2 நிமிடங்களும் 04.53 செக்கன்களை எடுத்துக் கொண்டார். இது அவரது அதிசிறந்த தனிப்பட்ட நேரப் பெறுமதியாகும்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய சாதனையுடன் இலங்கைக்கு 4 பதக்கங்கள்

முன்னதாக கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரடரில் பெண்களுக்கான 800 மீற்றரில் (2 நிமிடங்களும் 07.73 செக்.) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்த டில்ஷி, மீண்டும் தனது சொந்த சாதனையை 3.20 செக்கன்களினால் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் தனிநபர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்.

முன்னதாக நேற்று (08) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (54.03 செக்.) அதிசிறந்த காலப்பதிவுடன் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குபற்றிய ஜப்பான் நாட்டு வீராங்கனைகளான அயாகா கவாடா (2 நிமி. 04.14செக்.), அயானோ ஷியோமி (2 நிமி. 04.50செக்.) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.


800 மீற்றரில் ஹர்ஷவுக்கு ஏமாற்றம்

ஹர்ஷ கருணாரத்ன

இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்ஷ கருணாரத்ன, இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை 0.01 மில்லி செக்கன்களினால் தவறவிட்டார். அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 55.06 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை வீரர் ஹர்ஷ கருணாரத்ன ஆரம்பம் முதல் முன்னிலை பெற்றிருந்தார். எனினும், பசிந்துவுக்கு பலத்த போட்டியை ஜப்பான் மற்றும் ஈராக் நாட்டு வீரர்கள் கொடுத்திருந்ததை காணமுடிந்தது. இந்நிலையில், போட்டியின் இறுதி 100 மீற்றர் தூரத்தை ஓடுவதில் பின்னடைவை சந்தித்த ஹர்ஷ, முதலிரண்டு இடங்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை இறுதி ஒருசில செக்கன்களில் தவறவிட்டார். இதன்படி, ஜப்பானின் புகி டொரி (ஒரு நிமி. 54.99செக்.) முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார் எனினும், ஒரே நேரத்தில் போட்டியை நிறைவு செய்த ஈராக்கின் மொஹமட் ரஹீம் (ஒரு நிமி. 55.05செக்.) இரண்டாவது இடத்தையும், இலங்கையின் ஹர்ஷ கருணாரத்ன, 0.01 மில்லி செக்கன்களினால் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

பிலிப்பைன்ஸ் பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

எனினும், அண்மையில் நிறைவுக்கு தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 53.35 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தார். ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.


அமாஷாவுக்கு மற்றுமொரு பதக்க வாய்ப்பு

அமாஷா டி சில்வா

பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் கனிஷ்ட குறுந்தூர ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா, போட்டித் தூரத்தை 24.76 செக்கன்களில் ஓடி முடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

எனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட ஜப்பானின் மிக்கு யமதா (24.27 செக்.), முதலிடத்தையும், சீனாவின் யனன் தாவோ (24.73 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

எனவே ஒட்டுமொத்த நிலையில், அமாஷாவுக்கு 9 ஆவது இடம் கிடைத்திருப்பதுடன், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை ஜிஸ்னா மெதிவ் உள்ளிட்ட பிரபல வீராங்கனைகளை தோற்கடித்து இலங்கைக்காக மற்றுமொரு பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் (24.70 செக்.) அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


பசிந்துவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

பசிந்து கொடிகார

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இலங்கை அணியின் மற்றுமொரு மத்திய தூர ஓட்ட வீரரான பசிந்து கொடிகார இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் 4 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். அதற்காக அவர் 53.35 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

கண்டியில் முதல் தடவையாக நடைபெறவுள்ள ஒலிம்பியன்ஸ் ஓட்டம்

எனினும், தகுதிச் சுற்றுக்களின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பசிந்துவுக்கு நாளை (10) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஈரான், கட்டார் மற்றும் இந்திய நாட்டு வீரர்கள் பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இதே போட்டிப் பிரிவில் பங்கேற்றிருந்த பசிந்து, போட்டித் தூரத்தை 52.56 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தெற்காசிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


ரித்மாவுக்கு ஏமாற்றம்

ரித்மா நிஷாதி அபேரத்ன

பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையின் ரித்மா நிஷாதி அபேரத்ன 5.75 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் (5.91 மீற்றர்) அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் ஜப்பானின் அயாகா கொரா (6.44 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஜியாவி ஷோங் (6.44 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு ஜப்பான் வீராங்கனையான மீரே யொஷிஒகா (5.92 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பதக்கப்பட்டியில் இலங்கைக்கு 6 ஆவது இடம்

18 ஆவது தடவையாக நடைபெற்றுவரும் இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி 5 வீரர்களும், 7 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இலங்கை அணி, 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை வென்று பதக்கப்பட்டியில் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, 9 தங்கப் பதக்கங்களை வென்ற சீனா முதலிடத்திலும், 8 தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பான் இரண்டாமிடத்தையும், 4 தங்கங்களுடன் சீன தாய்ப்பே மூன்றாவது இடத்திலும் உள்ளளன.

விளையாட்டுத்துறை சட்டமூலத்தை திருத்தியமைக்க அறுவர் கொண்ட குழு நியமனம்

அத்துடன், தலா 3 தங்கப் பதக்கங்களை வென்ற கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இதேவேளை, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 4 ஆவதும், இறுதியுமான நாளான நாளை (10) தினமும் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் வீரர்கள் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தரிந்து தசுன், ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பசிந்து கொடிகார, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமாஷா டி சில்வா ஆகியோர் தனிநபர் இறுதிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 4 x 400 அஞ்சலோட்ட இலங்கை அணியும் இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.