பிலிப்பைன்ஸ் பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

175

பிலிப்பைன்ஸ் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் திலிப் ருவனும், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹேமந்த குமாரவும் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், ஆண்களுக்கான 400 மீற்றரில் கலந்து கொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான அஜித் ப்ரேமகுமார வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

பிலிப்பைன்ஸின் இலகான் நகரில் நேற்று (31) ஆரம்பமாகிய பிலிப்பைன்ஸ் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையிலிருந்து நான்கு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தெற்காசிய விளையாட்டு விழாவை நேபாளத்தில் நடத்துவதற்கு தீர்மானம்

இதில் நேற்று (31) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியை 46.87 செக்கன்களில் நிறைவு செய்த திலிப் ருவன் தங்கப் பதக்கம் வென்றார். அவருடன் போட்டியிட்ட சக வீரரான அஜித் ப்ரேமகுமார வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற திலிப் ருவன், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் தனது சிறந்த காலத்தைப் பதிவுசெய்து (46.39 செக்.) இரண்டாவது இடத்தையும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் முதலிடத்தையும் (46.42 செக்.) பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் போட்டிகளில் களமிறங்கிய அஜித் ப்ரேமகுமார அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதல் தகுதிகாண் போட்டியில் மூன்றாவது இடத்தையும், இரண்டாவது தகுதிகாண் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், இவ்விரண்டு வீரர்களும், கடந்த வருடம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை 4 x 400 மீற்றர் அணியில் இடம்பெற்றிருந்ததுடன், குறித்த போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ப்ரேமகுமார

இந்நிலையில், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட தமித் ஹேமந்த குமார தங்கப் பதக்கத்தை வென்றார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டு சுற்றுக்களைக் கொண்ட தகுதிகாண் போட்டிகள் இரண்டிலும் அவர் முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொள்ளவிருந்த அமில ஜயசிறி, காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்த தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 8.15 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தேசிய சாதனை படைத்த அமில ஜயசிறி, கடந்த ஒரு வருடங்களாக உபாதைக்குள்ளாகியிருந்தார்.

இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டு விழாவுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் 7.93 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 7.63 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து மூன்றாவது இடத்தையும் பெற்று தனது வழமையான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<