உலக பதினொருவர் அணியில் கார்த்திக், பாண்ட்யா இணைப்பு

790

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவிருக்கும் விஷேட T20 கிரிக்கெட் போட்டியில், உலக பதினொருவர் அணிக்காக இந்தியாவின் விக்கெட் காப்பாளரான தினேஸ் கார்த்திக் மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் ……

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல் காரணமாக அங்குள்ள 5 முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் பாரியளவில் சேதங்களுக்கு உள்ளாகின.

இந்த மைதானங்களை புனரமைப்பு செய்வதற்காகவும் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும் நிதியினை திரட்ட இந்த விஷேட T20 போட்டி மே மாதம் 31ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் கிரிக்கெட்டின் தாயகமான லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதன்படி, இப்போட்டிக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் ப்ரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரோடு 2 வருடங்களுக்குப் பிறகு அன்ட்ரு ரசலும் மேற்கிந்திய குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம், இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் உலக பதினொருவர் அணியினை வழிநடத்தவுள்ளதுடன், முன்னதாக அறிவிக்கப்பட்ட உலக பதினொருவர் அணியில் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி, சொஹைப் மலிக் மற்றும் இலங்கையின் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானின் ராஷித் கான் மற்றும் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர்களான சகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், உலக பதினொருவர் அணியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தினேஸ் கார்த்திக் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் இணைந்துகொள்ளவுதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று(03) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் கிள்ஸ் கிளார்க், ”இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான தினேஸ் கார்த்திக்கும், ஹார்திக் பாண்ட்யாவும் உலக பதினொருவர் அணியில் விளையாடுவது, லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள மறக்க முடியாத போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக, இப்போட்டியானது இந்திய ரசிகர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாக அமையவுள்ளதுடன், அவர்களது ஆதரவினை பெருமளவில் பெற்றுத் தரும் எனவும் நம்புகிறோம்” என்றார்.

உலக பதினொருவர் அணியில் பங்களாதேஷ், ஆப்கான் வீரர்கள் இணைப்பு

அடுத்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும்….

இதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற ஐ.சி.சியின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக 43 பந்துகளில் 76 ஓட்டங்களை ஹார்திக் பாண்ட்யா எடுத்திருந்ததுடன், தினேஸ் கார்த்திக் தனது ஒரு நாள் அறிமுகத்தை கடந்த 2004ஆம் ஆண்டு லோர்ட்ஸில் மைதானத்தில் பெற்றுக் கொண்டார்.

எனினும், இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தினேஷ் கார்த்திக், இறுதியாக கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியின் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள விஷேட T20 போட்டிக்கான உலக பதினொருவர் அணியில் இதுவரை 9 வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், எஞ்சிய வீரர்கள் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் இரண்டு தினங்களில் ஐ.சி.சியினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<