சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த போட்டியின் இமாலய வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் சரிவை எதிர் நோக்கியுள்ளது
சில்லேட் நகரில் நடைபெறும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களையும், விஷ்வ பெர்னாண்டோ 2 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
இதன் பின்னர் இன்று போட்டியின் மூன்றாம் நாளில் பங்களாதேஷை விட 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணியானது தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்திருந்தது. போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்தில் விஷ்வ பெர்னாண்டோ 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை நடந்தார்.
அதன் பின்னர் இலங்கை அணிக்காக பொறுப்புடன் ஆடத் தொடங்கிய கமிந்து மெண்டிஸ் – தனன்ஞய டி சில்வா ஜோடி ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை 173 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இது இலங்கை அணியினை பலமான நிலைக்கு கொண்டு சென்றது. இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டான தனன்ஞய டி சில்வா தன்னுடைய 12ஆவது டெஸ்ட் சதத்தோடு 2 சிக்ஸர்கள் 9 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் குவித்தார்.
தனன்ஞய டி சில்வாவினைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் உம் சதம் விளாச இலங்கை அணியானது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 110.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் கமிந்து மெண்டிஸ் 6 சிக்ஸர்கள் மற்றும் 16 பெளண்டரிகள் அடங்கலாக 164 ஓட்டங்களை எடுத்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹிதி ஹஸன் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நாஹிட் ரனா மற்றும் தய்ஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 511 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ள பங்களாதேஷ் அணி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து த நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.