2022ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் எப்படி இருந்தது?

International Cricket 2022

213

சமநிலை அடைந்த நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!

இப்போட்டி உள்ளடங்கலாக 2022ஆம் ஆண்டில் 86 டெஸ்ட் போட்டிகளும், 322 ஒருநாள் போட்டிகளும், 1069 T20I போட்டிகளும் ஆடவர் கிரிக்கெட்டில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் ஒப்பீட்டளவில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்ட ஆண்டாகவும் 2022ஆம் ஆண்டு அமைந்திருக்கின்றது.

பதிவுகள் சுருக்கம்

2022ஆம் ஆண்டில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக இந்தியா காணப்படுகின்றது. இந்திய அணி 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 46 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

அதேநேரம், டெஸ்ட் போட்டிகளை நோக்கும் போது 09 வெற்றிகளுடன் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக இங்கிலாந்தும், 08 தோல்விகளுடன் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக பங்களாதேஷ் அணியும் காணப்படுகின்றன.

ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக ஸ்கொட்லாந்து 15 வெற்றிகளுடன் காணப்பட, 16 போட்டிகளில் தோல்வியினைத் தழுவிய மேற்கிந்திய தீவுகள் 2022ஆம் ஆண்டு அதிக ஒருநாள் போட்டிகளில் தோல்வியினைத் தழுவிய அணியாக காணப்படுகின்றது.

T20I போட்டிகளை நோக்கும் போது அதிக வெற்றிகளைப் (28) பதிவு செய்த அணியாக இந்தியாவும், அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணியாக 17 தோல்விகளுடன் ருவன்டா அணியும் காணப்படுகின்றன.

  ஒருநாள் டெஸ்ட் T20I
அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் கெர்ஹாட் எரஸ்மஸ்

(நமீபியா – 956)

பாபர் அசாம் (பாகிஸ்தான் – 1184) சூர்யகுமார் யாதவ் (இந்தியா – 1164)
அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர் நதன் லயன், ககிஸோ றபாடா (47) பிலால் கான் (ஓமான் – 43) யலின்டே கான்யா (தன்சானியா – 43)
அதிக பிடியெடுப்பு ஆட்டமிழப்புக்கள் (Dismissals) கைல் வெரேய்னே (தென்னாபிரிக்கா – 39) மெதிவ் குரோஸ் (ஸ்கொட்லாந்து – 30) லோர்கன் டக்கர் (அயர்லாந்து – 26)

மீள் பார்வை – Review

இங்கிலாந்தின் ஆதிக்கம்

கடந்த 2022ஆம் ஆண்டு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் பொற்காலமாகும். குறிப்பாக இங்கிலாந்து அணி, புதிய டெஸ்ட் பயிற்றுவிப்பாளரான பிரன்டன் மெக்கலம் பொறுப்பேற்ற பின் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படும் விதத்தினையே 2022ஆம் ஆண்டில் மாற்றியிருந்தது.

அதன்படி, தாக்குதல் (Aggressive) முறையில் டெஸ்ட் போட்டிகளை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து புதிய டெஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸின் தலைமையில் தாம் விளையாடிய இறுதி 10 டெஸ்ட் போட்டிகளில் 09 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் பலமிக்க பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து 3-0 என டெஸ்ட் தொடரில் வீழ்த்தியும் வரலாறு படைத்தது.

மறுமுனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் வெற்றியாளர்களாகவும் இங்கிலாந்து மாறியதோடு, T20 உலகக் கிண்ணத் தொடரினை அதிக தடவைகள் வென்ற அணி என்ற சாதனையினையும் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணைந்து சமன் செய்திருந்தது.

இன்னும் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை (498) பெற்ற அணியாக சாதனை செய்ததோடு, டெஸ்ட் போட்டியொன்றில் நாள் ஒன்றில் அதிக ஓட்டங்கள் (506/4) எடுத்த அணியாகவும் புதிய சாதனை செய்தது.

கத்துக்குட்டி அணிகளின் அதிர்ச்சிகள்

2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் பெரும் கிரிக்கெட் அணிகளுக்கு கத்துக்குட்டி அணிகள் அதிர்ச்சி வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் முதல் அதிர்ச்சியாக இலங்கை அணியினை நமீபியா வீழ்த்தியதனையும் அதன் பின்னர் T20 உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தினை அயர்லாந்து வீழ்த்தியதனையும், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண கனவினை நெதர்லாந்து அணி கலைத்த விடயத்தினையும் குறிப்பிட முடியும்.

UAE அணியை உலகறிய வைத்த தமிழக வீரர்

2022ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி, அந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடனான முதல் சுற்றுப் போட்டியில் விளையாடியது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்காக ஆடிய தமிழகத்தினை பிறப்பிடமாக கொண்ட சுழல் பந்துவீச்சாளரான கார்த்திக் மெய்யப்பன் தனது அபார பந்துவீச்சு காரணமாக ஹட்ரிக் எடுத்திருந்ததோடு, இந்த ஹட்ரிக்கானது T20 உலகக் கிண்ணத் தொடரில் பெறப்பட்ட 5ஆவது ஹட்ரிக்காகவும் பதிவாகியிருந்தது.

இந்த ஹட்ரிக் மூலம் கார்த்திக் மெய்யப்பனுக்கு ஐக்கிய அரபு இராச்சிய அணிக்காக வெற்றியினைப் பெற்றுத்தர முடியாவிட்டாலும், சவால்மிக்க பந்துவீச்சாளர்கள் ஐக்கிய அரபு இராச்சிய அணியிலும் உள்ளனர் என கார்த்திக் மெய்யப்பன் தனது அணியினை உலகறிய வைத்திருந்தார்.

விராட் கோலியின் 71ஆவது சதம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான விராட் கோலி 1000 நாட்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் விளாச முடியாமல் விமர்சனங்களை எதிர் கொண்டு வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண T20I தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய 71ஆவது சதமாகவும் அவரின் கன்னி T20I சதமாகவும் அமைந்திருந்தது.

“மெண்டிஸ், ஹஸரங்கவின் பதவிகள் இலங்கையின் எதிர்காலம்” – தசுன் ஷானக

ஷேன் வோர்னின் மரணம்

அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவனான ஷேன் வோர்ன் தாய்லாந்துக்கு பயணமாகியிருந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதம் மாரடைப்புக்கு உள்ளாகி மரணமானார். ஷேன் வோர்ன் இறக்கும் போது அவருக்கு 52 வயதாக காணப்பட்டதோடு உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், இரசிகர்கள் உட்பட அனைவரும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி

கடந்த 2014ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வந்த இலங்கை கிரிக்கெட் அணியும், அதன் இரசிகர்களும் ஆறுதல் அடையும் விதமான நிகழ்வுகள் 2022ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்தன. அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசியக் கிண்ண சம்பியன்களாக நாமம் சூடியிருந்தது. இந்த ஆசியக் கிண்ணம் இலங்கை அணி சுமார் 8 வருடங்களின் பின் வென்ற முதல் ஆசியக் கிண்ணமாகவும், இலங்கை கிரிக்கெட் அணியானது அண்மைய நாட்களில் அடைந்த கொண்ட மிகச் சிறந்த பெறுபேறுகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டிருந்தது.

அத்துடன் நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை அணி தமது நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியையும் ஒருநாள் தொடர் ஒன்றில் 3-2 என தோற்கடித்திருந்தது. மேலும் 2022ஆம் ஆண்டில் இலங்கை ஒருநாள், டெஸ்ட் மற்றும் T20 என அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பதிவினை நிலைநாட்டியது. இந்த விடயங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு பிரதான காரணங்களாக மாறியிருந்தன.

ஜிம்பாப்வே, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளின் சிறந்த ஆண்டு?

ஜிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2022ஆம் ஆண்டு இலக்கங்களில் அதி சிறந்த பதிவினைக் காட்டாத போதும் அவ்வணிகள் சிறந்த சில பெறுபேறுகளை காட்டியிருக்கின்றன. இதில் முதலாவதாக நாம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை எடுத்துப் பார்க்கும் போது பங்களாதேஷ் நியூசிலாந்துடன் டெஸ்ட் போட்டியொன்றில் முதன் முறையாக வெற்றி பெற்றிருந்ததோடு, அந்த வெற்றியினை நியூசிலாந்தின் சொந்த மண்ணில் வைத்தும் பதிவு செய்திருந்தது. அத்துடன் பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற அணிகளுடனான ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியிருந்தது.

இப்பட்டியலில் அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியினை பார்க்கும் போது ஆப்கானிஸ்தான் அணி 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதியினைப் பெற்றிருந்ததோடு, இலங்கை அணியினை அதன் சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் போட்டியொன்றில் முதன்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்திருந்தது.

மறுமுனையில் ஜிம்பாப்வே அணி விறுவிறுப்பான T20 உலகக் கிண்ண குழுநிலை மோதலில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி தோல்வியினைப் பரிசளித்திருந்ததோடு, அவுஸ்திரேலிய அணியினையும் அவர்களது சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் போட்டியொன்றில் தோற்கடித்து 2022ஆம் ஆண்டினை பிரகாசமாக மாற்றியிருந்தது.

இரண்டு இறுதிப் போட்டிகளை கோட்டைவிட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம் என இரண்டு பெரிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு தெரிவான போதும் அவ்வணியினால் கிண்ணங்களை வெல்ல முடியவில்லை.

ஐ.சி.சி. இன் சிறந்த வீரர் பரிந்துரையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்

மறுமுனையில் சொந்த மண்ணில் 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியினால் டெஸ்ட் வெற்றி ஒன்றினை பெற்றிட முடியாத துர்ப்பாக்கிய நிலையும் உருவாகியிருந்தது. இதில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கே டெஸ்ட் தொடரில் 3-0 என  கிடைத்த வைட்வொஷ் தோல்வி மூலம் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத வடுவொன்றையும்  வழங்கியது. இந்த விடயங்களை வைத்துப் பார்க்கும் போது 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு மறக்கப்பட வேண்டிய ஆண்டுகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏமாற்றம்

2022ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகில் எதிர்பாராத ஏமாற்றங்கள் சிலவும் நடைபெற்றிருந்தன. அதன்படி இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகாமல் வெளியேறியதனை குறிப்பிட முடியும். அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த ஆண்டு அயர்லாந்துடன் நடைபெற்ற ஒருநாள் தொடரினையும் பறிகொடுத்து கிரிக்கெட் இரசிகர்களை ஏமாற்றி இருந்தது.

நாம் மேலே பார்த்த விடயங்களில் உங்களுக்கு கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மறக்க முடியாத அனுபவமாக எது அமைந்தது? கீழே குறிப்பிடுங்கள்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<