ஒன்பது புதுமுக வீரர்களை அறிமுகம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

284
Pakistan Test Squad
@Getty Images

தென்னாபிரிக்க அணியுடன் இம்மாதம் 26ஆம் ஆரம்பமாகின்ற டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் பாகிஸ்தான் அணி 09 புதுமுக வீரர்கள் உடன் 20 பேர் கொண்ட தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது. 

>> இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்துவரும் இங்கிலாந்து!

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரினை 2-0 எனப் பறிகொடுத்த பாகிஸ்தான் தற்போது தமது சொந்த மண்ணுக்கு வரும் தென்னாபிரிக்க வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. 

இந்த டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் அணி அறிமுகம் செய்யவிருக்கின்ற 09 வீரர்களும் அந்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அண்மையில் திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

புதிய வீரர்களில் அப்துல்லாஹ் சபீக், இம்ரான் பட் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் என்பதோடு கம்ரான் குலாம், சல்மான் அலி அகா, செளத் சகீல், ஆகியோர் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களாக காணப்படுகின்றனர். இதேரேம், நெளமான் அலி, சஜித் கான் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாகவும், ஹரிஸ் ரவுப், தபிஷ் கான் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இரண்டு வருடங்களின் பின்னர் வேகப்பந்துவீச்சாளரான ஹசன் அலி பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்டின்றார். ஹசன் அலியும் அண்மைய உள்ளூர் போட்டிகளில் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

>> அஷ்வினால் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் – முரளிதரன்

ஹசன் அலியுடன், ஐந்து வருட இடைவெளி ஒன்றுக்குப் பின்னர் சகலதுறைவீரரான மொஹமட் நவாஸ் உம் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கின்றார். கடைசியாக 2016ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நவாஸ் அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தானின் உள்ளூர் முதல்தரக் கிரிக்கெட் தொடரில் 22 விக்கெட்டுக்களைச் சாய்த்து 744 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஹாரிஸ் சொஹைல், ஷான் மசூத், மொஹமட் அப்பாஸ் மற்றும் ஷபர் கோஹர் ஆகிய வீரர்களுக்கு தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

அதோடு உபாதை அழுத்தம் ஒன்றின் காரணமாக நஸீம் சாஹ் உம், தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் குழாம், எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் உயிர்பாதுகாப்பு வலயத்தில் தங்களது பயிற்சிகளை ஆரம்பிக்கவிருக்கின்றனர்.

பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ஆம் திகதி கராச்சி நகரிலும், இரண்டாவது போட்டி ராவல்பிண்டியிலும் இடம்பெறுகின்றது.

பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் – அபீட் அலி, அப்துல்லாஹ் சபீக், இம்ரான் பட், அஷார் அலி, பாபர் அசாம் (அணித்தலைவர்), பவாட் அலாம், கம்ரான் குலாம், சல்மான் அலி அகா, செளத் சகீல், பஹீம் அஸ்ரப், மொஹமப் நவாஸ், மொஹமட் றிஸ்வான், சப்ரா அஹமட், நெளமான் அலி, சஜித் கான், யாசிர் சாஹ், ஹரிப் ரவுப், ஹசன் அலி, தபிஷ் கான் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<