பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத பிரச்சினைகள் காரணமாக இதுவரை காலம் பாகிஸ்தான் தமது போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடாத்தி வந்தது.

இந்நிலையில் இவ்வருட ஒக்டோபர் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கையில் நடாத்த எதிர்பார்த்துள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போதுமான வருவாய் கிடைக்கப் பெறாமை மற்றும் செலவுகள் தொடர்பான விடயங்களைக் கருத்திற் கொண்டே பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்தத் தொடரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் தமது முதல் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி 2002ஆம் ஆண்டு இலங்கையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை நடாத்தியது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின் மிகுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளை சார்ஜாஹ் நகரில் நடாத்தியது.

மேற்கிந்தியக் கிரிக்கட் தொடரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை நிர்வாகக் குழுத் தலைவர் நஜாம் செதி கருத்துத் தெரிவிக்கையில்முதலில் இலங்கையில் போட்டிகளை நடாத்த மைதானங்கள் கிடைக்கக்கூடிய நிலையில் உள்ளதா எனப் பார்க்க வேண்டும், அத்தோடு காலநிலை தமக்கு சாதகமாக அமையுமா எனப் பார்க்க வேண்டும்என்று கூறியுள்ளார்.

இவ்வருடம் இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி ஒரு முழுத் தொடருக்காக ஜூலை மாத இறுதி தொடக்கம் செப்டம்பர் மாத ஆரம்பம் வரை இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன் பின் இலங்கை அணி சிம்பாபே மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளோடு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. இதனால் இலங்கையில் மைதானங்கள் கிடைக்கப்பெறும் சாத்தியம் உள்ளது.  இவ்வாறு மேற்கிந்திய தொடர் இலங்கையில் நடாத்தப்பட்டால் அதில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை  நடாத்துவது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை மேற்கிந்தியக் கிரிக்கட் சபைக்கு வேண்டுகோள் விடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்