செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

DICC T20 World Cup 2024

65
DICC T20 World Cup 2024

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை செவிப்புலனற்றோர் அணியை 88 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council – DICC) 4ஆவது செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற இம்முறை போட்டித் தொடரானது லீPக் முறையின் கீழ் நடைபெற்றது.  இதன்படி, லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் வெற்றியீட்டி செவிப்புலனற்றோருக்கான உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

ஷார்ஜாவில் நேற்று (12) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் ராஜித்த அசங்க மற்றும் சஜித் மதுரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை செவிப்புலனற்றோர் அணி 16.5 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 89 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் உதய லக்மால் மற்றும் மல்கம் ஆகியோர் தலா 16 மற்றும் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜாபர் அலி மற்றும் மன்சூர்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதேவேளை, கிமந்து மெல்கம் தலைமையிலான இலங்கை செவிப்புலனற்றோர் அணியில் பாலகிருஷ்ணன் தர்மசீலன், அலன்ரோஸ் காலேப் ஆகிய தமிழ் பேசும் வீரர்கள் விளையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<