இரட்டைச் சதத்தோடு ஏறாவூர் அறபா அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த சம்ஹான்

181

இலங்கை பாடசாலைகள் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்தும் 2023ஆம் ஆண்டுக்கான 15 வயதின்கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கான டிவிஷன்-III கிரிக்கெட் போட்டியொன்றில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணிக்கு எதிராக ஏறாவூர் அறபா கல்லூரி அணி சம்ஹானின் சகலதுறை ஆட்டத்தோடு முதல் இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண நடைபெறும் இடம் மாறாது – ICC

ஒருநாள் இன்னிங்ஸ் மோதலாக நடைபெற்ற இப்போட்டியானது நேற்று (13.) ஏறாவூர் அஹமட் பரீட் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித மிக்கேல் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித மிக்கேல் கல்லூரி அணியினர் 8 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்து தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.

புனித மிக்கேல் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய M. இஷேத்வான் 9 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அறபா கல்லூரி அணியின் பந்துவீச்சில் சம்ஹான் அஹ்மட் ஹட்ரிக் ஒன்று அடங்கலாக 20 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 04 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அஸ்பாக் அஹ்மட் 02 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்த அறபா கல்லூரி அணியினர் போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் வரையில் துடுப்பாடியதோடு 49 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்கள் எடுத்தனர்.

முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

அறபா கல்லூரியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய சம்ஹான் அஹ்மட் முன்னர் வெளிப்படுத்திய பந்துவீச்சைப் போன்று துடுப்பாட்டத்திலும் அதிரடி இரட்டைச் சதம் பூர்த்தி செய்து வெறும் 141 பந்துகளில்  37 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 209 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார். அதேநேரம் ஹஸீப் அஹ்மட் அறபா அணிக்காக 39 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போட்டியில் புனித மிக்கல் கல்லூரி பந்துவீச்சு சார்பில் இஷத்வான், டெரிக் அன்டர்சன், சிவஹரேஷ் மற்றும் றாகல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு பிரயோசனமற்றதாக மாறியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித மைக்கல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 148/9 (50.1) இஷத்வான் 59, சம்ஹான் அஹ்மட் 4/20, அஸ்பாக் அஹ்மட் 2/40

அறபா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 318/4 (49) சம்ஹான் அஹ்மட் 209, ஹஸீப் அஹ்மட் 39

முடிவு – ஏறாவூர் அறபா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<