கனிஷ்ட ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை

326

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் 4ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு மலேஷியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.

லீக் போட்டிகளில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத அணியாக A பிரிவிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறிய பங்களாதேஷ் அணி, B பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தானை முதலாவது அரையிறுதியில் சந்தித்தது. கோலாலம்பூரில் நேற்று (16) நடைபெற்ற இப்போட்டியில் டக்வத் லூவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களைக் குவித்தது.

அவ்வணி சார்பாக பின்க் கோஷ் 82 ஓட்டங்களையும், சைப் ஹசன் 61 ஓட்டங்களையும் குவிக்க, மத்திய வரிசையில் களமிறங்கிய அபிப் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக முனிர் ரியாஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

எனினும், மைதானத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் போட்டிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதன்படி, மழை காரணமாக பாகிஸ்தானுக்கு 39 ஓவர்களில் 198 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்து வெற்றியைப் பதிவுசெய்தது.

இலங்கைக்காக ஜொலித்த சானக்க; இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீடு

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய மொஹமட் தாஹா 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டு அவ்வணியை வெற்றிபெறச் செய்ததுடன், போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

இந்நிலையில், இளையோர் ஆசிய கிண்ணத்தின் 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று (17) கோலாலம்பூர், கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்திய இப்போட்டியில், முஜீப் சத்ரானின் அபார பந்துவீச்சில் இளம் ஆப்கானிஸ்தான் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நேபாள அணி, ஆப்கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 28 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அனில் ஷா 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க மற்றைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து சென்றனர்.

பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்ட முஜீப் சத்ரான், 10 ஓவர்கள் பந்துவீசி, 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், கைஸ் அஹமட், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக ரஹ்மான் குல் 71 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற B பிரிவுக்கான முதல் லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தியடதுடன், இதில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்து 7 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இப்போட்டியிலும் பந்துவீச்சில் அசத்திய முஜீப் சத்ரான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, 4ஆவது இளையோர் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், எதிர்வரும் 19ஆம் திகதி கோலாலம்பூர் கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2012ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் சம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்து 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. எனினும், ஆப்கானிஸ்தான் அணி முதற்தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இந்நிலையில், இளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை மற்றும் இந்திய அணிகள் இம்முறை தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறின.

ஹத்துருசிங்கவை அன்புடன் வரவேற்கிறோம் : அமைச்சர் தயாசிறி

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி B பிரிவில் முன்னிலை பெற்றது. எனினும், பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் குறைந்தளவு நிகர புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைப் பெற்றக்கொண்டது. இந்நிலையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற ஆப்கானுடனான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை அதிக ஓட்ட வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு பறிபோனது.

அதேபோன்று கடந்த 3 தடவைகளாக இப்போட்டித் தொடரின் சம்பியனாக வலம்வந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் களமிறங்கிய பிரபல இந்திய இளையோர் அணி முதல் போட்டியில் வரவேற்பு நாடான மலேஷியாவை வென்றாலும், நேபாளத்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நேபாளம் எந்த வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றது கிடையாது. முன்னதாக இந்தியாவை எதிர்த்து நேபாளம் இரண்டு முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியிலும், மூன்று முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய இளையோர் கிண்ணப் போட்டியிலும் விளையாடியது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷிடம் தோற்று முதற்தடவையாக இப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது.

எனவே இம்முறை போட்டித் தொடரில் வெற்றிபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளான இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறாவிட்டாலும், இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டி அணிகளாக வர்ணிக்கப்படுகின்ற ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் வரை தெரிவாகியமை எதிர்வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.