ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக ரஷீத் கான்

517
AFP

இளம் சுழல் நட்சத்திரமான ரஷீத் கான், அனைத்து வகைப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான அஸ்கர் ஆப்கான், ஆப்கானிஸ்தான் அணியின் உபதலைவராக இனிவரும் காலங்களில் செயற்படவுள்ளார். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) இன்று (12) வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் தமது அணியில் புதிய தலைவர், உபதலைவர் பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருந்தது. 

உலகக் கிண்ணத்தை உலுக்கிய ஆர்ச்சரின் டுவீட்டுகள்

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில்….

ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் மூன்று வகைப் போட்டிகளிலும் மூன்று வெவ்வேறு தலைவர்களை நியமனம் செய்திருந்தது. அதன்படி, முன்னர் உலகக் கிண்ணம் அடங்கலாக ஒருநாள் போட்டிகளில் குல்படின் நயீப், T20 போட்டிகளில் ரஷீத் கானும், டெஸ்ட் போட்டிகளில் றஹ்மத் ஷாஹ்வும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர்களாக நியமனம் பெற்றிருந்தனர். 

எனினும், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடர்ச்சியான தோல்விகளால் மீண்டும் அணித்தலைவர் பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. 

உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட சகலதுறை வீரரான குல்படின் நயீப் பந்துவீச்சில் ஓவருக்கு 6.39 ஓட்டங்கள் என்ற ரீதியில் வழங்கியிருந்ததோடு, 21.5 ஓட்டங்கள் என்ற துடுப்பாட்ட சராசரியையும் காட்டியிருந்தார். இப்படியான மோசமான பதிவுகள் குல்படின் நயீப்பின் அணித்தலைவர் பதவியை இழக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. 

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள ரஷீத் கான் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு போட்டி கொண்ட  டெஸ்ட் போட்டி மூலம் தனது தலைமைத்துவ பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கின்றார்.  

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்

இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக்….

ரஷீத் கான் அணியை தலைமை தாங்கவுள்ள டெஸ்ட் போட்டியை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முக்கோண T20 தொடரில் விளையாடவுள்ளது. 

இந்த முக்கோண T20 தொடரின் பின்னர் இந்தியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும் இருதரப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கின்றது. இந்த இருதரப்பு தொடரில் ஒருநாள், T20, டெஸ்ட் என மூன்று வகைப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<