இளம் வயதில் திடீர் ஓய்வை அறிவித்தார் மொஹமட் ஆமிர்

366
ICC

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் முக்கிய இடம் வகிக்கும் இடதுகை பந்துவீச்சாளரான மொஹமட் ஆமிர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார். 

1992ஆம் பிறந்த மொஹமட் ஆமிர் 2009ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் முதல் முதலாக டி20 போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். பின்னர் குறுகிய காலப்பகுதியில் இலங்கை அணியுடன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அறிமுகம் பெற்றார். 

ஆசிய, உலக பதினொருவர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம்

ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையில்…

2009 ஜூலை 4ஆம் திகதி காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக மொஹமட் ஆமிர் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். ஆரம்ப காலத்திலிருந்து இடதுகை வேகத்தால் எதிரணியினரை மிரட்டிவந்த ஆமிர் பாரிய தடைக்கு முகங்கொடுத்தார். 

2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் போட்டி சூதாட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்தினால் அப்போதைய பாக். டெஸ்ட் அணியின் தலைவர் சல்மான் பட், மொஹமட் ஆசிப் மற்றும் இளம் வீரர் மொஹமட் ஆமிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச கிரிக்கெட் பேரவை இவர்கள் மூவருக்கும் ஐந்தாண்டுகள் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விளையாட அதிரடி தடை விதித்தது. இதன் காரணமாக மறைந்து இருந்த மொஹமட் ஆமிர் கடந்த 2016 ஆம் ஆண்டில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார்.

அதன் பின்னர் எப்படி அணியிலிருந்து சென்றாரோ அதே பாணியில் மீண்டும் அணிக்கு திரும்பி அதிரடியாக பந்துவீச தொடங்கினார். அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண தொடருக்கான பாக். அணியின் குழாமில் இடம்பெறாத ஆமிர் பின்னர் வெளியிடப்பட்ட அடுத்த குழாமில் ஒரு வீரராக இடம்பெற்றார். பின்னர் உலகக்கிண்ண தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் தேவைப்பட்ட வீரராகவும் ஆமிர் மாறியிருந்தார். 

இந்நிலையில் தற்சமயம் மொஹமட் ஆமிர் சிறந்த அடைவு மட்டத்தில் இருக்கும் போது வெறும் 36 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் தனது 27 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். மொஹமட் ஆமிர் இறுதியாக இவ்வாண்டு ஜனவரியில் தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து புறக்கணிப்பட்டதால் பிரியாவிடை…

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், 5 வருடம் விளையாடாமல் ஏனைய 5 வருடத்தில் 36 போட்டிகளில் 119 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் 4 தடவைகள் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பமாகின்ற இக்காலகட்டத்தில் மொஹமட் ஆமிரின் திடீர் ஓய்வு பாகிஸ்தான் அணிக்கு பாரிய இழப்பாக காணப்படுகின்றது. இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெறுகின்ற நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் இன்று டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெற்றுள்ளார்.     

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<