பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

4124

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து புறக்கணிப்பட்டதால் பிரியாவிடை போட்டியொன்றை தரும்படி கோரிக்கை விடுத்தேன். எனினும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அணியில் நிரந்தர ஒரு வீரராக மீண்டும் இடம்பிடித்து திறமைகளை வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது, பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவித்தார். 

“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல்…

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் உலகின் யோக்கர் மன்னனுமான லசித் மாலிங்க, நாளை நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பிறகு ஒருநாள் அரங்கிற்கு விடைகொடுக்கவுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை அணி வீரர்கள் நேற்றைய தினம் (24) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், நாளைய போட்டியின் கதாநாயகனான லசித் மாலிங்க எமது இணையத்தளத்துக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். 

இதன்போது ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து மாலிங்கவின் மனநிலை எவ்வாறு உள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

”2017 ஆம் ஆண்டு எந்தவொரு காரணமும் இல்லாமல் என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். அப்போது நான் எந்தவொரு உபாதைக்கும் முகங்கொடுக்கவில்லை. அதேபோல, உடற்தகுதி பரிசோதனையில் தகுதி பெறாமலோ அல்லது விக்கெட்டுக்களையோ நான் கைப்பற்றாமல் இருக்கவும் இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கியமைக்கான காரணத்தை அனைவரும் நன்கு அறிவர். அப்போது நான் என்னை அணிக்கு தேர்வு செய்யாவிட்டால் பிரியாவிடை போட்டியொன்றை தரும்படி கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர்கள் அதற்கும் மறுப்பு தெரிவித்தனர். 

எனவே எனக்கு பிரியாவிடை போட்டியொன்றை தராவிட்டால் எப்படியாவது மீண்டும் அணிக்குள் வருவேன் என்று மனதில் உறுதி கொண்டேன். அப்போது எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. எனவே தனியாக உடற்பயிற்சிகளை செய்து, பந்துவீச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டு இறுதியில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரில் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நான் யார்? என்னிடம் உள்ள திறமை என்ன? என்பது பற்றி நிரூபித்துக் காட்டினேன். 

அதன்பிறகு நடைபெற்ற அனைத்துப் போட்டித் தொடர்களிலும் நான் விளையாடினேன். எனவே என்னை அணியில் இணைத்துக் கொண்ட போது பலரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். அதேபோல, எனக்கு வயதாகிவிட்டதால் 2, 3 போட்டிகள் தொடர்ந்து விளையாடுவது கடினம் எனவும் தெரிவித்தனர். 

“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல்…..

ஆனால், ஆசிய கிண்ணப் போட்டிகள் முதல், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா தொடர்கள், 17 ஐ.பி.எல் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் மற்றும் இறுதியாக நடைபெற்ற 7 உலகக் கிண்ண போட்டிகள் என அனைத்துப் போட்டிகளிலும் இடைவிடாது தொடர்ந்து விளையாடினேன். எனவே என்னை விமர்சித்த அனைவருக்கும் நான் பதிலடி கொடுத்து விட்டேன். 

எனவே அப்போது எனக்கு பிரியாவிடை போட்டியொன்றை தருவதற்கு மறுத்தவர்களுக்கு மீண்டும் அணிக்குள் இடம்பெற்று நிரந்தர வீரராக விளையாடி எனக்கு தேவையான நேரத்தில் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்தேன். 

உண்மையில் தற்போது நான் மிகவும் சந்தோஷத்துடன் உள்ளேன். கிரிக்கெட் அரங்கில் அனைத்து சாதனைகளையும் நான் நிலைநாட்டி விட்டேன். கிரிக்கெட்டின் சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டேன். அந்த மனநிறைவுடன் நான் ஓய்வு பெறவுள்ளேன். 

என்னைப் போல இலங்கை அணிக்காக விளையாடிய ஒரு சில வீரர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அந்த வரிசையில் நானும் ஒருவனாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார். 

இதேநேரம், மாலிங்கவின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்ன என்பது பற்றி கேட்ட போது, நான் 2004 இல் அறிமுகமானேன். அப்போது நான் சமிந்த வாஸுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தேன். அப்போது நுவன் குலசேகரவை சந்தித்தேன். சமிந்த வாஸ் சென்ற பிறகு நானும், குலசேகரவும் 13 வருடங்கள் தொடர்ந்து விளையாடினோம். இதன் போது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை மிகப் பெரிய மாற்றத்துக்கு உள்ளாக ஆரம்பமாகியது. நாங்கள் இருவரும் தலா 5 ஓவர்கள் வீதம் எந்தவொரு ஓட்டங்களையும் கொடுக்காமல் பந்துவீசினோம். 

அதிலும் குறிப்பாக, ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட் எடுக்கின்ற ஒரு பந்துவீச்சாளராக என்னை மாற்றிய பெருமை நுவன் குலசேகரவை சாரும். எனவே குலசேகர வழங்கிய ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

2012 இல் மெல்பேர்னில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நானும், அஞ்செலோ மெதிவ்ஸும் இணைந்து விளையாடி அணியை வெற்றிபெற வைத்தோம். இந்தப் போட்டியும் எனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது என தெரிவித்தார். 

கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத சம்பவங்களைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு மாலிங்க பதிலளிக்கையில்,  ”கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு எல்லாம் ஞாபகத்தில் உள்ளது. ஒருநாள் அரங்கில் பெற்றுக்கொண்ட 335 விக்கெட்டுக்களையும், நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்ததையும் நான் மறக்க மாட்டேன். 

நான் விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் என்னால் மறக்க முடியாது. நான் பிரேமதாஸ மைதானத்தில் 3 தடவைகள் ஹெட்ரிக் விக்கெட் எடுத்துள்ளேன். உண்மையில் இதே மைதானத்தில் ஓய்வுபெற கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது. எனவே நான் முகங்கொடுத்த கஷ்டங்களுக்கு எனக்கு சிறந்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடிந்தது” என தெரிவித்தார். 

பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரின்பின் இலங்கையின் தரவரிசையில் ஏற்படும் மாற்றங்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது…

இது இவ்வாறிருக்க, இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கக்கூடிய அறிவுரை என்ன என மாலிங்கவிடம் வினவிய போது, ”பொதுவாக எனக்கு விக்கெட் கைப்பற்ற முடியாமல் போனதால் தான் போட்டியில் தோல்வியைத் தழுவினோம் என வீரர்கள் சொல்வதை நான் கேட்டுள்ளேன். 

உண்மையில் அது அப்படி நடக்க வாய்ப்பில்லை. என்னுடைய அதிர்ஷ்டம் நான் விக்கெட் எடுப்பேன். எனக்குப் பிறகு இந்த இடத்திற்கு வருகின்ற இளம் வீரர்களுக்கு விக்கெட் எடுக்கின்ற நுணுக்கத்தை, அழுத்தங்களின் போது போட்டியை எவ்வாறு கையாள வேண்டும் என்ற நுணுக்கத்தை இவ்வாறான போட்டிகளின் போது நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு இடமளிக்கவே கூடாது. 

அவ்வாறான விடயங்களை இலங்கை A கிரிக்கெட் அணியில் வைத்தே அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது தேசிய அணி, அதுவும் சர்வதேசப் போட்டியொன்றாக இது இருக்கும். இது தான் கற்றுக்கொண்டதை பிரயோகிக்கின்ற இடம். இங்கு வந்து ஒருநாளும் கற்றுக்கொள்ள கூடாது. நாங்கள் அந்த பின்னணியை ஏற்படுத்தினால் இதைவிட எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன். இந்தக் காலப்பகுதியில் நான் அவ்வாறான முன்னேற்றத்தைக் காணவில்லை. எனவே நான் ஓய்வு பெற்ற பிறகு அதற்கான அடித்தளம் போடப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். 

இறுதியாக எதிர்கால திட்டங்கள் என்ன என்பது பற்றி மாலிங்க கருத்து தெரிவிக்கையில், ”அவ்வாறு மிகப் பெரிய திட்டங்கள் இல்லை. 2020 டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். அதற்குமுன் டி-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் நாங்கள் விளையாட வேண்டும்.

அதேபோல, இலங்கை அணியை தகுதிகாண் போட்டிகளில் வெற்றி பெறச் செய்து உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பை பெற்றுக் கொடுத்த பிறகு என்னை அணியில் இருந்து நீக்கினால் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் நான் இதுவரை ஆறு டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனவே நாளை நடைபெறுகின்ற விடயத்தை இன்று கூறமுடியாது. உண்மையில் இலங்கை அணியை டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதிபெறச் செய்வது தான் எனது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது” என குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை ரசிகர்களிடம் இருந்து இதுவரை காலமும் கிடைத்த ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட மாலிங்க, தற்போதுள்ள இளம் வீரர்களுக்கும் இதேபோன்ற் ஆதரவை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<