2023இல் இலங்கை பங்கேற்கும் விளையாட்டு நிகழ்வுகள்

359

கோலாகலமாக பிறந்துள்ள 2023 புத்தாண்டை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வருடமாக இருக்க வேண்டுமென அனைவரும் வாழ்த்தும் நிலையில் 2023ஆம் ஆண்டில் பல முக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இதில் ஐசிசியின் ஒருநாள் உலகக் கிண்ணம், ஐசிசியின் மகளிருக்கான T20 உலகக் கிண்ணம், ஆசிய விளையாட்டு விழா, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா என்பன இலங்கை வீரர்கள் இந்த ஆண்டு பங்கேற்கவுள்ள முக்கிய சர்வதேச விளையாட்டு தொடர்களாக அமைந்துள்ளன.

>> இலங்கை விளையாட்டுத்துறையில் 2022இல் நடந்தவை

அதேபோல, இலங்கை பங்கேற்காத சர்வதேச போட்டிகளைப் பொறுத்தமட்டில் இந்தியாவில் ஹொக்கி உலகக் கிண்ணம், பிரான்சில் றக்பி உலகக் கிண்ணம், அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் பிபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடர் என்பன இந்த ஆண்டுக்கான பிரதான விளையாட்டு நிகழ்ச்சிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, மலர்ந்துள்ள 2023ஆம் ஆண்டில் இலங்கை எந்தெந்த விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளது என்பது தொடர்பிலான விபரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கிரிக்கெட்

கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி டிசம்பர் 30ஆம் திகதி முடிவடைந்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் மோதியிருந்த நிலையில், அதே இரண்டு அணிகளும் இந்த ஆண்டின் (ஜனவரி 02) முதலாவது சர்வதேசப் போட்டியில் விளையாடின.

புத்தாண்டில் முதலாவதாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 T20i மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இலங்கை களமிறங்குகிறது.

அதன் பிறகு, இலங்கை அணி மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்துடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியும்.

>> இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!

ஆனால் பெப்ரவரி மாதம் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெறுகின்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளைப் பொறுத்து தான் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறு முடியுமா என்பது உறுதி செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. 12 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேறினால் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக்கில் தற்போது 77 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை, இந்த ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை கட்டாயம் வெல்ல வேண்டும்.

ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் தரவரிசையில் முதல் ஏழு அணிகள் மற்றும் உலகக் கிண்ணத்தை நடத்தும் இந்திய அணி உள்ளிட்ட 8 அணிகள் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும். மேலும் இரண்டு அணிகள் உலகக் கிண்ண தகுதிச் சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி முதல் 8 இடங்களுக்குள் வர முடியாவிட்டால், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட வேண்டும்.

>> 2022 இல் இலங்கை விளையாட்டில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள் 

இது தவிர, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் மகளிருக்கான அங்குரார்ப்பண 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் 8ஆவது மகளிர் T20i உலகக் கிண்ணத் தொடரிலும் இலங்கை கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரும், அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடரும் இந்த ஆண்டு நடைபெறவுள்ளன.

இதேவேளை. சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் உள்ளிட்ட முக்கிய தொடர்களும் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

ஆசிய விளையாட்டு விழா

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு சீனாவில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டு விழா இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இலங்கை உள்ளிட்ட 45 ஆசிய நாடுகள் 37 போட்டி நிகழ்ச்சிகளுக்காக இம்முறை விளையாட்டு விழாவில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலைப்பந்து உலகக் கிண்ணம்

16ஆவது மகளிர் வலைப்பந்து உலக சம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு ஜூலை 28ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற உள்ளது. இவ்வருட வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் C குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தென்னாபிரிக்கா, வேல்ஸ் மற்றும் ஜமைக்கா ஆகிய அணிகளுடன் முதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக தடகள சம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவுள்ளது. மெய்வல்லுனர் விளையாட்டின் பிரதான போட்டித் தொடராக விளங்குகின்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு ஒருசில தகுதிகாண் போட்டிகளை இந்த ஆண்டு முற்பகுதியில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமாத்திரமல்லாமல், ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தின் பட்டயாவில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும், ட்ரினிடாட் அண்ட் டொபேகோவில் பெதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவும் சீனாவில் ஆசிய விளையாட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

>>  மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<