இலங்கை – பாகிஸ்தான் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில்

58

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவுக்கு வந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மாத்திரம் அதிக நேரம் நடைபெற்றிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் குறைந்த ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. அதேநேரம், நேற்றைய நான்காவது நாள் ஆட்டமும் சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், இன்றைய தினம் இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை  தொடர்ந்ததில், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தனன்ஜய டி சில்வா 6வது டெஸ்ட் சதத்தை கடந்து 102 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அணி ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.

தனன்ஜய டி சில்வாவுக்கு அடுத்தப்படியாக திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்கள், ஓசத பெர்னாண்டோ 40 ஓட்டங்கள், நிரோஷன் டிக்வெல்ல 33 மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் 31 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் சாஹ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, 252 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு, போட்டி சமனிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய அபிட் அலி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் கன்னி சதத்தை விளாசியிருந்தார். அத்துடன், ஆடவர் கிரிக்கெட்டில் தன்னுடைய கன்னி டெஸ்ட் மற்றும் கன்னி ஒருநாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.

இவருக்கு அடுத்தப்படியாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அஷாம் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். இதன்படி, அபிட் அலி 109* ஓட்டங்களையும், பாபார் அஷாம் 102* ஓட்டங்களையும், அணித் தலைவர் அஷார் அலி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதன் காரணமாக, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இரண்டு அணிகளுக்கும் தலா 20 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ம் திகதி கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<