உலகக் கிண்ண இலங்கை அணி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சூசகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக்காக பதினொரு வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ஒருசில வெற்றிடங்களுக்கான வீரர்களை மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் பிறகு தெரிவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுத்தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளதால், அதில் பங்கேற்கவுள்ள வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும். எனவே உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இறுதி அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு நாடுகளும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக்

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் கடந்த வருடம் ….

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை தெரிவுசெய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ள்து.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்துக்கு இலங்கை அணியின் ஆயத்தம் குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அசந்த டி மெல் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தபோதிலும், உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள 10 -11 வீரர்களை நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். எனவே எஞ்சியுள்ள வீரர்களை நாளை மறுதினம் (04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த பிறகு தெரிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. அதிலும் குறிப்பாக, இலங்கை வீரர்கள் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சை முகங்கொடுப்பதில் தடுமாறியிருந்தனர். மற்றைய நாடுகளை எடுத்துக்கொண்டால் தங்கள் அணிகளில் குறைந்தபட்சம் ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரை அணியில் உள்ளடக்கியிருப்பார்கள். அதேசமயம் இலங்கை வீரர்கள் மத்திய வரிசையில் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொள்ள தவறிவிட்டனர்.

எனவே, மத்திய வரிசையைப் பலப்படுத்துவதற்கு அஞ்செலோ மெதிவ்ஸின் அனுபவம் எமக்குத் தேவை. அவருக்கு ஐந்தாவது இடத்தில் களமிறங்குவதற்கு முடியும். கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய மெதிவ்ஸ் தற்போது 100 சதவீதம் பூரண குணமடைந்துள்ளார். எனவே இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி விளையாடுகின்ற முக்கிய வீரராக அவர் திகழ்வார். அத்துடன், இம்முறை மாகாண ஒருநாள் போட்டித் தொடரிலும் இலங்கை அணியின் ஏனைய அனுபவமிக்க வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம். அவர்களால் மாத்திரமே நெருக்கடியான சந்தர்ப்பங்களில் களமிறங்கி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முடியும். மாறாக, எமது இளம் வீரர்களுக்கு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எனவே, முதலில் அவர்கள் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெறலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் சானக்க ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் அவர்களால் மாகாண ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாது. இதில் அசேல குணரத்ன, பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் களத்தடுப்பில் ஈடுபட்ட போதும், தசுன் சானக்க கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிகளின் போதும் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ்….

இந்த இரண்டு வீரர்களின் உபாதைகள் குறித்து அசந்த டி மெல் கருத்து வெளியிடுகையில், இந்த இரண்டு வீரர்களும் மாகாண ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தால் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. எனினும், தற்போது உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் அவர்களுக்கு மாகாண ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விட்டது என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வந்த, அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் மற்றும் டி-20 போட்டித் தொடர்களில் பிராகாசித்திருந்த ஜெப்ரி வெண்டர்சே, ஓஷத பெர்ணான்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் உலகக் கிண்ண இலங்கை அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுவிட்டனர்.

அண்மையில் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் தத்தமது உபாதைகளில் இருந்து குணமடைந்து மீண்டும் இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, குறித்த வீரர்கள் தமது உடற்தகுதியை எதிர்வரும் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேநேரம், மோசமான துடுப்பாட்டம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட தினேஷ் சந்திமாலுக்கு இம்முறை மாகாண ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் களமிறங்கி நீண்ட இன்னிங்ஸொன்றை விளையாடி மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புகின்ற பொன்னான வாய்ப்பொன்று கிடைத்துள்ளது. ஏனெனில் அண்மையில் நிறைவுக்குவந்த தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் நிரோஷன் திக்வெல்ல எதிர்பார்த்தளவு திறமையினை வெளிப்படுத்துவதற்கு தவறிவிட்டதால், அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமாலை அணிக்குள் கொண்டுவருவதற்கு தேர்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற மாகாண ஒருநாள் போட்டித் தொடர் குறித்த ஊடக சந்திப்பு மற்றும் கிண்ண அறிமுக வைபவத்தில் கலந்துகொண்டு இலங்கை அணியின் உலகக் கிண்ண ஆயத்தம் குறித்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரவீன் விக்ரமரத்ன கருத்து வெளியிடுகையில், தம்புள்ளை ஆடுகளமானது தட்டையானதாக (Flat pitch) இருப்பதால் நிறைய பௌண்சர் பந்துகளை சந்திக்க நேரிடுவதுடன், வீரர்களுக்கு அதிக ஓட்டங்களையும் குவிக்க முடியும். எனவே இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களை ஒத்ததாகவே இருக்கும். அதேபோல, இம்முறை உலகக் கிண்ணத்தில் 250 -280 ஓட்டங்களைக் குவிக்கின்ற ஆடுகளங்களையே ஐ.சி.சி தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தம்புள்ளையில் இடம்பெறவுள்ள பயிற்சி முகாம்கள் எமது வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் திமுத் கருணாரத்ன

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, மதுபோதையில்….

இதன்படி, உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அறிவிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதன் பிறகு தம்புள்ளை மற்றும் பல்லேகலையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஒரு வாரகால விசேட பயிற்சி முகாம்களில் அவர்கள் பங்குபற்றவுள்ளனர். அதன் பிறகு எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி இலங்கை அணி இங்கிலாந்து செல்லவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<