டர்பனில் இலங்கை அணியும் குசல் பெரேராவும் பதிவு செய்த சாதனைகள்

2600
Kusal Perera's Heroics Breaks

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி இலங்கை அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற அதிரடி ஆட்டக்காரரான குசல் ஜனித் பெரேரா, டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

தனி ஒரு வீரராக ஆர்ப்பரிப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா டெஸ்ட் அரங்கில் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் பெற்றுக்கொண்ட சதமாகவும் பதிவாகியது. அவருக்குத் துணையாக விளையாடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்னாந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல், 27 பந்துகளுக்கு முகங்கொடுத்து வெறுமனே 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அத்துடன், கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியாக 133 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அவர் அசத்தியிருந்தார்.

குசல் பெரேராவின் போராட்ட சதத்தோடு டர்பன் டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட்…

இந்தப் போட்டியில் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபோது துடுப்பாடுவதற்கு களமிறங்கிய குசல் பெரேரா, சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக ஆடுகளத்தில் இருந்து 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகளைக் குவித்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியின் தொடர் டெஸ்ட் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிராக சதம் கடந்து ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் குசல் ஜனித் பெரேரா பதிவுசெய்த குறித்த முக்கியமான சுவாரஷ்யமான விடயங்களை இங்கு பாரக்கலாம்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1999ஆம் ஆண்டு தன் சொந்தமண்ணில் பிரையன் லாரா ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 153 ஒட்டங்களினால் 300 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி அபாரமான டெஸ்ட் வெற்றியை மேற்கிந்திய தீவுகளுக்கு பெற்றுத் தந்ததைப் போல் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களைப் பெற்று 304 ஓட்டங்கள் என்ற இமாலயஇலக்கை பரபரப்பான டெஸ்ட் போட்டியில் விரட்டி வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றியை குசல் ஜனித் பெரேரா இலங்கை அணிக்கு தேடித்தந்தார்.

அன்று லாரா செய்தது தன் சொந்த மண்ணில், ஆனால் இன்று குசல் பெரேரா செய்தது அன்னிய மண்ணில். ஆக்ரோஷமும், வீரியமும் நிறைந்த தென்னாபிரிக்க பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் மண்ணில் பெற்றுக்கொண்ட சாதனை வெற்றி இதுவாகும்.

வீரர்கள் ஓட்டங்கள் எதிரணி மைதானம் வருடம்
குசல் ஜனித் பெரேரா (இலங்கை) 153* தென்னாபிரிக்கா டர்பன் 2019
பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) 151* அவுஸ்திரேலியா பிரிட்ஸ் டவுண் 1999
நீல் ஹார்வி (அவுஸ்திரேலியா) 151* தென்னாபிரிக்கா டர்பன் 1950
அடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா) 149* பாகிஸ்தான் ஹோபார்ட் 1999
க்ரைக் சேர்ஜீன்ட் (அவுஸ்திரேலியா) 124 மேற்கிந்திய தீவுகள் ஜோர்ஜ்டவுண் 1978

Photo Album – Sri Lanka vs South Africa 1st Test 2019 | Day 4

1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லாரா, கார்ட்னி வோல்டன் கூட்டணி அமைத்து டெஸ்ட் அரங்கில் மிகப்பெரிய வெற்றியொன்றைப் பெற்றாலும், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் குசல் பெரேரா இலங்கை அணியின் கடைசி விக்கெட்டுக்காக விஷ்வ பெர்னாந்துவுடன் இணைந்து பகிர்ந்த இணைப்பாட்டம் (78) டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்ஸில் 10ஆவது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடி என்ற சாதனையாக இடம்பிடித்தது. இதற்குமுன் பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் மற்றும் முஸ்தாக் அஹமட் ஜோடி 57 ஓட்டங்கள் (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக – 1994) எடுத்திருந்தனர்.

இறுதி இன்னிங்ஸில் இறுதி விக்கெட்டுகாக பெறப்பட்ட சிறந்த இணைப்பாட்டம்

ஜோடி ஓட்டங்கள் எதிரணி மைதானம் வருடம்
குசல் ஜனித் பெரேராவிஷ்வ பெர்னாந்து(இலங்கை) 78* தென்னாபிரிக்கா டர்பன் 2019
இன்சமாம் உல் ஹக்முஸ்தாக் அஹமட் (பாகிஸ்தான்) 57* அவுஸ்திரேலியா கராச்சி 1994
டேவ் நேர்ஸ்பேர்ஸி சேர்வெல் (தென்னாபிரிக்கா) 48* இங்கிலாந்து ஜொஹனஸ்பேர்க் 1906
சிட்னி பேர்ன்ஸ்ஆர்தர் பீல்டர் (இங்கிலாந்து) 39* அவுஸ்திரேலியா மெல்பேர்ன் 1908

ஒரு விக்கெட் வெற்றி

இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 2ஆவது முறையாக வெற்றி பெற்றது. ஏற்கனவே, 2006இல் கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே தென்னாபிரிக்க அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இப்போட்டியில் மஹேல ஜயவர்தன சதமடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணியொன்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 13ஆவது சந்தர்ப்பமாகவும் இது இடம்பிடித்தது.

டெஸ்ட் போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் – குசலைப் புகழும் பிரபலங்கள்

குசல் ஜனித் பெரேராவின் போராட்ட சதத்தோடு இலங்கை அணி, தென்னாபிரிக்க..

300 ஓட்டங்கள்

இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் 300க்கும் அதிகமான ஓட்டங்கள் என்ற இலக்கினை 4ஆவது தடவையாக துரத்தி அடித்துள்ளது. இதற்குமுன் ஜிம்பாப்வே அணிக்கெதிராக (391 ஓட்டங்கள்) 2017ஆம் ஆண்டும், தென்னாபிரிக்காவுக்கு எதிராக (352 ஓட்டங்கள்) 2006ஆம் ஆண்டும் வெற்றி பெற்றிருந்தது.

300க்கும் அதிகமான ஓட்ட இலங்க்கை துரத்திய பதிவுகள்

ஓட்டங்கள் இலக்கு எதிரணி மைதானம் வருடம்
391-6 388 ஜிம்பாப்வே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானம் 2017
352-9 352 தென்னாபிரிக்கா கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானம் 2006
326-5 326 ஜிம்பாப்வே கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் 1998
304-9 304 தென்னாபிரிக்கா டர்பன் 2019
220-8 220 பாகிஸ்தான் ராவல்பிண்டி 2000

முதல் அணி

தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்கு அதிகமாக துரத்தியடித்து வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி எள்ற பெருமையையும் இலங்கை பெற்றுக்கொண்டது. இதற்குமுன் 1991ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களை அவ்வணிக்கு எதிராக துரத்தியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக ஓட்டங்கள்

டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி சார்பாக 2ஆவது இன்னிங்ஸுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது வீரராக குசல் ஜனித் பெரேரா வரலாற்றில் இடம்பிடித்தார்.

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்த லசித் எம்புல்தெனிய

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்…

அத்துடன், வெளிநாட்டு மண்ணில் 4ஆவது இன்னிங்ஸுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது வீரராகவும் மாறினார். இதற்குமுன் பாகிஸ்தான் அணியின் யூனில் கான் இலங்கை அணிக்கெதிராக ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களையும் (பல்லேகலை மைதானம் – 2015), அதே போட்டியில் மற்றுமொரு பாகிஸ்தான் வீரரான ஷான் மசூத் 125 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்;.

வீரர்கள் ஓட்டங்கள் எதிரணி மைதானம் வருடம்
குமார் சங்கக்கார 192 அவுஸ்திரேலியா ஹோபார்ட் 2007
குசல் ஜனித் பெரேரா 153* தென்னாபிரிக்கா டர்பன் 2019
அரவிந்த டி சில்வா 143* ஜிம்பாப்வே கொழும்பு (எஸ்.எஸ்.சி) 1998
சனத் ஜயசூரியா 131 அவுஸ்திரேலியா கண்டி 2004
குமார் சங்கக்கார 130* பாகிஸ்தான் கொழும்பு (எஸ்.எஸ்.சி) 2009

இறுதியாக….

வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற இலங்கை முதல் முறையாக தென்னாப்பிரிக்கத் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதன்படி, இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி போர்ட் எலிசெபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பில்லை. எனவே, போட்டியை சமநிலை செய்ய வேண்டும். மறுபுறத்தில் இலங்கை அணிக்கு முதற்தடவையாக தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<