இலங்கை – பங்களாதேஷ் தொடர் நடைபெறுவதில் சந்தேகம்!

807

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பின்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பங்ளாதேஷ் அணி, இலங்கை வருவதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் மாதம் மூன்றாம் வாரப்பகுதியில் ஆரம்பிக்கவிருந்தது.

இன்ஸ்டாகிராமிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி

எனினும், இரண்டு நாடுகளும் கொவிட்-19 வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்கள் இலங்கை வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் வீடியோ அழைப்பின் மூலம் பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, பங்களாதேஷ் வீரர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை ஒருமனதாக மறுத்துள்ளனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செற்பாட்டு தலைவர் அக்ரம் கான், ஏற்கனவே அட்டவணையிடப்பட்ட நேரத்தில் இந்த சுற்றுப் பயணம் நடைபெற வாய்ப்புகள் குறைவு என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“நாம் வீரர்கள் அனைவரிடமும் கலந்துரையாடினோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வீரர்கள் விருப்பம் காட்டவில்லை. எனவே, இந்த தொடர் நடைபெறுவதற்கு மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன” என்றார்.

இலங்கை கிரிக்கெட் சபையானது குறித்த இந்த தொடரை நடத்த வேண்டும் என தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த போதும், இலங்கை கிரிக்கெட் அணி தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வீரர்கள் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்வதை தடைசெய்துள்ளது. அதேநேரம், தனிநபர் பயிற்சிகளை மாத்திரம் மேற்கொள்ள பங்களாதேஷ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

“இலங்கை அணி கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், நாம் இதுவரை பயிற்சிகளைக்கூட ஆரம்பிக்கவில்லை. இந்த நிலைமை எப்போது சரியாகும் என்பது தொடர்பில் தெரியாது. வீரர்கள் நீண்ட நாட்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கின்றனர். எனவே, மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கு திரும்ப 40 நாட்களாவது பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாதம் வீரர்களின் திறமைக்கான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், உடற்தகுதி பயிற்சிகளை 10 நாட்களுக்காவது மேற்கொள்ள வேண்டும். எனவே, இலங்கை தொடர் குறித்த சரியான ஒரு தகவலை எம்மால் வழங்க முடியாது” என அக்ரம் கான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க