மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழத்தினது ஏற்பாட்டில் இடம்பெற்றவடக்கின் சுப்பர் கிங்-2016′ கிண்ணத்திற்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட வட மாகாண ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மன்னார் ஹில்லரி விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது.

இறுதிப் போட்டி

வடக்கின் முன்னனி வீரர்கள் பலரை உள்ளடக்கிய, ஓர் மிகச் சிறந்த இளைஞர் படையைக் கொண்டுள்ள இளவாலை யங் ஹென்றிஸ் அணி, விறுவிறுப்பான இத்தொடரின் அரையிறுதியில் உருத்திரபுரம் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

2016ஆம் ஆண்டிற்கான “வடக்கின் சுப்பர் கிங்” மன்னார் ஹில்லரியா? இளவாலை யங் ஹென்றிஸா?

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின்..

அவ்வாறே மறு பக்கத்தில் வடக்கின் உதைபந்தாட்டத்தில் ஓர் தனி அடையாளத்தைத் தனக்கெனவே கொண்ட அணியும், அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டியில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அணியான மன்னார் ஹில்லரி அணி, திக்கம் இளைஞர் அணியை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், இரண்டாவது முறையாகவும்வடக்கின் சுப்பர் கிங்போட்டித் தொடரின் இறுதியில் தடம் பதித்திருந்தது.

இதனடிப்படையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ரசிகர்களின் பலத்த ஆதரவிற்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், ஆரம்பத்திலேயே தனக்குக் கிடைத்த ப்ரீ கிக்கை கோலாக்காது வீணடித்தார் ஹில்லரியின் நட்சத்திர வீரர் றஞ்சன்.

தொடர்ந்து வேகமாக ஆடிய யங் ஹென்றிஸ் அணிக்கு கோல் பெறுவதற்குக் கிடைத்த வாய்ப்பை மதுஸ்ரன், யூட் சுமன் ஆகியோர் அடுத்தடுத்து கோட்டை விட்டனர்.

அதேவேளை, ஹில்லரியின் யேசுதாசன், டிலுக்சன் ஆகியோர் கோல் கம்பத்தை நோக்கி லாவகமாக உதைந்த போதும் அவற்றை இலகுவாக முறியடித்தார் ஹென்றிஸின் கோல் காப்பாளர் அமல் ராஜ்.

ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் அனோஜன் கொடுத்த பந்தினை மிகவும் லாவகமாக கோலாக மாற்றினார் மகிபன்.

தொடர்ந்தும் மான்னார் ஹில்லரி தமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் பந்தை கோல் காப்பாளரின் கைகளினை நோக்கியே உதைந்து கொண்டிருந்தமையினால், யங் ஹென்றிஸ் அணியின் முன்னிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, மகிபனின் ஒரு கோலுடன் நிறைவடைந்தது முதல் பாதி.

முதல் பாதி: யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் 01 – 00 ஹில்லரி விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதனை உணர்ந்து, மிக வேகமாக ஹென்றிஸின் கோல் பரப்பை ஆக்கிரமித்தனர் ஹில்லரி வீரர்கள். ஆனாலும் அவர்களது கோல் பெறும் முயற்சிகளைத் தடை செய்து கொண்டிருந்தார் ஹென்றிஸின் பின்கள வீரரான ரூபன்ராஜ்.

ஹென்றிஸின் மதுசன், தனேஸ் ஆகியோர் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சாதகமாக்கி கோல் பெறத் தவறினர். அதேபோன்றே, ஹில்லரி அணியின் முதலாவது கோலினைப் பெறுவதற்கு றஞ்சன், யேசுதாசன் ஆகியோர் தொடர்த்தும் போராடிக்கொண்டிருந்தனர்

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் மகிபன் இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்து யங் ஹென்றிஸை இரு கோல்களினால் முன்னிலைப் படுத்தினார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, றஞ்சன் வேகமாக கடத்திக் கொடுத்த பந்தை யேசுதாசான் கோல் பரப்பை நோக்கி உதைந்த போது கம்பத்தில் பந்து பட்டு வெளியேறியமையினால் அவ்வணிக்கான கோல் வாய்ப்பு மயிரிழையில் தவறவிடப்பட்டது.  

பின், 43ஆவது நிமிடத்தில் தனேஸ் மேலும் ஒரு கோலினைப் போட்டு ஹென்றிஸ் அணியின் ஆதிக்கத்தை உறுதி செய்தார்.

தொடர்ந்தும் ஹென்றிஸ் அணியினருக்கு கோல் போடும் வாய்ப்புக்கள் கிடைத்த போதும் அவர்கள் அதனைத் தவற விட, மறுபக்கத்தில் தமது முதல் கோலிற்காகப் போராடிக்கொண்டிருந்தனர் ஹில்லறி அணியினர்.

போராட்டத்தின் பயனாக இறுதி (50) நிமிடத்தில் றஞ்சன் கொடுத்த பந்தை லாவகமாகக் கோலாக்கினார் யேசுதாசன்.

பிற்பாதி கோல்களுடன் இந்த விறுவிறுப்பான போட்டியில் அனுபவம் வாய்ந்த மன்னார் ஹில்லரி அணியை வீழ்த்தி, ‘வடக்கின் சுப்பர் கிங்-2016′ கிண்ணத்தைத் தமதாக்கியது இளம் வீரர்களைக் கொண்ட இளவாலை யங் ஹென்றிஸ் அணியினர்.

முழு நேரம்: யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் 03 – 01 ஹில்லரி விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம்
மகிபன் – 13′, 42′, தனேஸ் – 43′

ஹில்லரி விளையாட்டுக் கழகம்
யேசுதாசன் -50′

Thepapare.com இன் ஆட்ட நாயகன்மகிபன் – யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம்

இறுதிப் போட்டியில் களங்கண்ட யங் ஹென்றிஸ் வீரர்களுள் மகிபனைத் தவிர ஏனைய அறுவரும் கடந்த வருடம் இடம்பெற்ற கொத்மலே கிண்ணத் தொடரில் புனித ஹென்றியரசர் கல்லூரி அணியில் களங்கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி தொடர்பாக Thepapare.com இடம் கருத்துத் தெரிவித்த மான்னார் ஹில்லரி அணியின் பயிற்றுவிப்பாளரும், தலைவருமாகிய .றஞ்சன் வட மாகாண ரீதியான தொடர்களில் தாம் சத்தித்த மூன்றாவது இறுதிப் போட்டித் தோல்வி இது. வட மகாண ரீதியான போட்டிகளுக்கு யாழ்ப்பாண நடுவர்கள் மட்டும் செயற்படக் கூடாது. பொதுவான நடுவர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

யங் ஹென்றிஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் எம். டனிஸ்ரன் விஜயகுமார் கருத்துத் தெரிவிக்கையில் நான்கு வெவ்வேறு லீக்களைச் சேர்ந்த அணிகள் களங்காணவிருப்பதால் கிண்ணத்தைத் தமதாக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததோடு, ஹில்லரி அணி சவாலாக இருக்கும் என்பதனை அறிந்து மிகவும் காடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டோம். போட்டியில் வீரர்களின் செயற்பாடு சிறப்பாக இருந்தது. அதிலும் கோல் காப்பாளர் அமல்ராஜ் குறிப்பிடத்தக்கவர் எனத் தெரிவித்தார்.


மூன்றாம் இடத்திற்கான போட்டி

இப்போட்டியில் வடமராட்சி லீக்கினைச் சேர்ந்த திக்கம் இளைஞர் அணியினரும் கிளிநொச்சி லீக்கினைச் சேர்ந்த உருத்திரபுரம் அணியினரும் மோதினர்.

போட்டியின் முதல் பதி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருத்திரபுரம் அணிக்கு 5ஆவது நிமிடத்தில் கிளைக்சன் முதல் கோலினைப் போட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 10ஆவது நிமிடத்தில் திக்கம் அணியின் சாருஜன் தமது முதல் கோலினைப் பெற்றுக் கொடுத்தார். எனினும், அதே வேகத்தில் கிளைக்சன் 11ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலினையும் போட்டார்.

தொடர்ந்தும் தமது ஆதிக்கத்துடன் ஆடிய உருத்திரபுரம் அணிக்கு கிருசாந்தன் 16ஆம் மற்றும் 25ஆம்ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் பெற்றுக் கொடுத்தார்.

முதல் பாதி: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 04 – 01 திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் மிக வேகமாக ஆடிய திக்கம் அணிக்கு 27ஆவது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலைப் போட்டார் கஜோபன்.

எனினும் அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆட்டத்தைத் தமது கட்டுக்குள் கொண்டுவந்த உருத்திரபுரம் அணிக்கு கிளைக்சன் 30ஆவது மற்றும் 33ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் பெற்று அணியை 4 கோல்களினால் முன்னிலைப் படுத்தினார்.

திக்கம் அணியின் கோல் போடும் முயற்சிகள் உருத்திரபுரம் அணியினரால் முறியடிக்கப்பட, போட்டியில் உருத்திரபுரம் அணியினர் வெற்றியை சுவைத்தனர்.

முழு நேரம்: கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 06 – 02 திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம்

Thepapare.com இன் ஆட்ட நாயகன் முத்துலிங்கம் கிளைக்சன் – (கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்
முத்துலிங்கம் கிளைக்சன் -4′, 11′, 30′, 33′, முத்துக்குமார் கிரிசாந்தன்-16′, 25′

திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம்
தி.சாருஜன்- 10′, கே.கஜோபன்- 27′

விருதுகள்

நல்லொழுக்கமான அணி – கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க
வளர்ந்து வரும் இளம் வீரர் – தி.விதுசன் (திக்கம் இளைஞர் வி.க)
சிறந்த பின்கள வீரர் – யூட் சுபன் (யங் ஹென்றிஸ் வி.க)
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – அ.மகிபன் (யங் ஹென்றிஸ் வி.க)
சிறந்த கோல் காப்பாளர் – அமல்ராஜ் (யங் ஹென்றிஸ் வி.க)
அதி கூடிய கோல்கள் பெற்ற வீரர் – றஞ்சன் (மன்னார் ஹில்லறி வி.க)
சுற்றுத் தொடரின் ஆட்ட நாயகன் – தனேஸ் (யங் ஹென்றிஸ் வி.க)