மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும்வடக்கின் சுப்பர் கிங்-2016” கிண்ணத்திற்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது முறையாகவும் நடாத்தப்படும் இந்த வடக்கின் சுப்பர் கிங் தொடரின் போட்டிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்காக 44 அணிகள் அழைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் வதிரி டைமண்ட்ஸ் மற்றும் ஈவினை காளியம்பாள் ஆகிய அணிகளைத் தவிர ஏனைய 42 அணிகளும் பங்கெடுத்திருந்தன.

முதலாவது சுற்றுக்காக குழுவிற்கு 11 அணிகள் வீதம் A,B,C,D என 4 குழுக்களாக அணிகள்  பிரிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு குழுக்களும் 1,2,3 என 3 உப குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விலகல் முறையில் முதலாவது சுற்று இடம்பெற்றது. இச்சுற்றில் ஒவ்வொரு உப குழுக்களில் இருந்தும் வெற்றிபெற்ற ஒரு அணி குழு நிலை ஆட்டத்திற்கு தெரிவாகியது.

கிரேட் ஸ்டார் அணியை வீழ்த்திய பாடும்மீன் அணிக்கு டிவிஷன் 2 தொடரின் மூன்றாம் இடம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின்..

எனவே, A,B,C,D ஆகிய ஒவ்வொரு குழுவிற்கும் தலா 3 அணிகள் தெரிவு செய்யப்பட்டன. இம்மூன்று அணிகளும் லீக் முறையில் மோதி, அக்குழுக்களில் முன்னிலை பெறும் முதலிரு அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

குழு A – ஊரெளு றோயல் மற்றும் குப்பிளான் குறிஞ்சிக் குமரன்
குழு B – திக்கம் இளைஞர் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம்
குழு C – மன்னார் ஹில்லரி மற்றும் இளவாலை யங் ஹென்றிஸ்
குழு D – நாவாந்துறை சென் மேரிஸ் மற்றும் நாவற்குழி அன்னை

காலிறுதிப் போட்டியில் யங் ஹென்றிஸ், ஹில்லரி, கிளிநொச்சி உருத்திரபுரம் மற்றும் திக்கம் இளைஞர் ஆகிய அணிகள் வெற்றி பெற்று, அடுத்த சுற்றான அரையிறுதிக்குத் தெரிவாகின.  

அரையிறுதியில் வெற்றிகொண்ட யங் ஹென்றிஸ் மற்றும் ஹில்லரி அணிகள் தீர்மானம்மிக்க இறுதிப் போட்டியில் கிண்ணத்திற்காக பலப்பரீட்சை நடாத்தவுள்ளதுடன், அரையிறுதியில் தோல்வியுற்ற கிளிநொச்சி உருத்திரபுரம் மற்றும் திக்கம் இளைஞர் அணிகள் 3ஆம் இடத்திற்கான போட்டியில் மோதவுள்ளன.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இவ்விரு அணிகள் தொடர்பிலான ஒரு ஆழமான பார்வை உங்களுக்காக

இளவாலை யங் ஹென்றிஸ்

வடக்கின் முன்னணி வீரர்கள் பலரை உள்ளடக்கிய, ஓர் மிகச் சிறந்த இளைஞர் படையைக் கொண்டுள்ள இளவாலை யங் ஹென்றிஸ் அணி, முதல் முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குழு C இன் 3ஆவது உப குழுவில் விலகல் சுற்றில் அல்வாய் மனோகரா அணியை வெற்றி கொண்டு இவ்வணி லீக் சுற்றுக்குள் நுழைந்தது. பின்னர், லீக் சுற்றில் புத்தூர் விக்னேஸ்வரா அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியும், மன்னார் ஹில்லரி அணியுடனான போட்டியை சமநிலை செய்தும், குழுவில் 2ஆம் இடம்பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதியில் வடக்கின் வலிமையான அணியாகக் கருத்தப்படும் குழு Dஇல் முதலாம் இடம் பிடித்த நாவாந்துறை சென் மேரிஸ் அணியுடனான மிகவும் விறுவிறுப்பான போட்டி 2-2 என சமநிலையில் நிறைவுற, தண்டவுதையில் (பெனால்டி) வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியது யங் ஹென்றிஸ்.

அரையிறுதியில் ஹென்ரிஸ் அணி, கிளிநொச்சி உருத்திரபுரம் அணியுடன் மோதியது. கிளிநொச்சி உருத்திரபுரம் அணியைப் பொறுத்தவரை, குழு Bஇல் 3ஆவது உப குழுவில் அங்கம் வகித்து மகாத்மா அணியை விலகல் சுற்றில் 4-0 என வீழ்த்தி லீக் சுற்றுக்கு சென்றது. அதில் சென் லூட்ஸ் அணியிடம் 2-1 என தோல்வி கண்டும், திக்கம் இளைஞர் அணியை 4-0 என வெற்றி பெற்றும், B குழுவின் முதலாவது அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் குழு Aஇல் இரண்டாம் இடம் பிடித்த குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணியை தண்டவுதையில் 6-5 என வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியது.  

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதியில் வின்சனின் 2 கோல்களின் உதவியுடன் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதன்முறையாய் நுழைந்தது யங் ஹென்றிஸ் அணி.

இறுதிப் போட்டியில் களங்காணவிருக்கும் ஹென்றிஸ் அணிக்கு, நட்சத்திர வீரர் ஞானரூபன் வினோத் உபாதை காரணமாக அணியில் இல்லாமை ஒரு இழப்பாகவே உள்ளது. எனினும் அவருடைய வெற்றிடம் வெளிக்காட்டப்படாத அளவிற்கு இளைய வீரர்களான தனேஸ், மதுஸ்ரன், மகிபன் ஆகியோர் முன்களத்தில் மிகவும் பலமாக ஆடி வருகின்றனர். அரையிறுதியில் கைகொடுத்த வின்சன் இறுதிப் போட்டியிலும் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலிறுதி, அரையிறுதிகளில் ஆடாத ஹென்றிஸின் நம்பிக்கைக்குரிய பின்கள வீரரான யூட் சுமன் அணிக்குத் திரும்புவதால் அணி மேலும் வலுப்பெறும். நுட்பமறிந்த கோல் காப்பாளர் அமல்ராஜும் அணியிலிருக்க, மிகவும் வலுவான அணியாகக் களமிறங்கி ஹில்லரியின் சவால்களை தகர்த்து, கிண்ணத்தைத் தமதாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது இளவாலை சென் ஹென்றிஸ்.

தொடர்கிறது லெஸ்டர் அணியின் சோகம்: ஆர்சனல் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

பிரீமியர் லீக் தொடர் சேம் வோக்ஸின் இறுதி நேர கோலின் உதவியுடன் பர்ன்லி அணியானது..

ஹென்றிஸ் அணியைப் பொருத்தவரை, புனித ஹென்ரியரசர் கல்லுரியின் 19 வயதுக்கு உட்பட்ட குழாத்தினையே அதிகமாக கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அதிகமான வீரர்கள் கடந்த வருடத்தின் கொத்மலே கிண்ணம் உட்பட பல தொடர்களில் தேசிய ரீதியில் சிறப்பித்த வீரர்களாகவே உள்ளனர். தமது கடந்த கால அனுபவங்கள் அணிக்கு சிறந்த முறையில் கைகொடுக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

அணி விபரம்:

லோகலிங்கம், றூபன், மகிபன், சுரேந்தர், டான்ஸஸ் குமார், ரூபன்ராஜ், நிரோசன், கௌதமன், தனேஸ், அனோஜன், அமல்ராஜ், அன்ரனிராஜ், கிருசாந், செந்தூரன், மதுசன், யூட் சுபன், மாறன், வின்சன், பிரகாஷ், ஞானரூபன்

மன்னார் ஹில்லரி

வடக்கின் உதைபந்தாட்டத்தில் ஓர் தனி அடையாளத்தைத் தனக்கெனவே கொண்ட அணியும், அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டியில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அணியுமான மன்னார் ஹில்லரி விளையாட்டுக் கழக அணி இரண்டாவது முறையாகவடக்கின் சுப்பர் கிங்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தடம் பதித்துள்ளது.

கடந்த வருடம் இறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியிடம் தோல்வி கண்ட ஹில்லரி அணி, கடந்த முறை இழந்த கிண்ணத்தை இம்முறை கைப்பற்றும் ஒரே நோக்குடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

விலகல் முறையிலான சுற்றில் குழு Cஇன் 1ஆம் உப குழுவில் அங்கம் வகித்த ஹில்லரி அணி, ஆனைக்கோட்டை யூனியனை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வென்று லீக் சுற்றுக்குள் நுழைந்தது. லீக் சுற்றில் புத்தூர் விக்னேஸ்வரா அணியை 4-3 என போராடி வென்றும், யங் ஹென்றிஸ் அணியுடனான போட்டியை சமநிலைப்படுத்தியும், குழுவின் முதலாவது அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதியில் குழு Dஇன் 2ஆவது அணியான நாவற்குழி அன்னை அணியை 4-0 என இலகுவாக வீழ்த்தி அரையிறுதியை எட்டியது ஹில்லரி. அரையிறுதியில் ஹில்லரி அணி, திக்கம் இளைஞர் அணியுடன் மோதியது.

திக்கம் இளைஞர் அணி, குழு Bஇன் 1ஆம் உப குழுவில் அங்கம் வகித்த கொலின்ஸ், கலைவாணி அணிகளை விழ்த்தி லீக் சுற்றுக்குத் தகுதி பெற்று, லீக் சுற்றில் உருத்திரபுரம் அணியிடம் 4-0 என தோல்வியடைந்தும், இளவாலை சென் லூட்ஸ் அணியை 3-0 என வெற்றி பெற்றும் குழு Bஇன் 2ஆவது இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அரையிறுதியில் அனுபவ வீரர் றஞ்சனின் 03 கோல்களின் உதவியுடன் 4-0 என திக்கம் இளைஞர் அணியை வென்று இறுதிப் போட்டியில் தடம்பதித்திருக்கிறது மன்னார் ஹில்லரி விளையாட்டுக் கழகம்.

ஹில்லரி அணியைப் பொறுத்தவரையில் இலங்கையின் பல பாகங்களிலும்,  பல்வேறு அணிகளுடன் களம் கண்ட அனுபவ வீரர்களைக் கொண்ட அணியாகும். குறிப்பாக அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டிகளில் தமக்கென ஓர் தனியிடம் பெற்றுள்ள அணியாகும்.

குறிப்பாக தேசிய மட்டத்தில் தமது தரத்தை வெளிப்படுத்தும் முகமாக அவ்வணி, கடந்த வருடம் FA கிண்ணத்தின் காலிறுதிச் சுற்று வரை வந்து, அதில் பிரபல கொழும்பு கால்பந்து கழகத்திடம் தோல்வி கண்ட ஒரு அணியாக உள்ளது.

நிதர்சனின் கோல் மழையால் FA கிண்ணத்தின் யாழ் லீக் சம்பியனானது சென். மேரிஸ்

FA கிண்ணத்தின் யாழ் லீக் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில்…

ஹில்லரியின் முன்களம் கொண்டிருக்கும் அனுபவ வீரர்கள் எதிரணியின் எவ்வாறான தடைகளையும் தகர்த்து கோல் பெறும் வல்லமை படைத்தவர்கள். முன்கள வீரரான றஞ்சன் இதுவரை தொடரில் அதிக கோல்கள் (07) பெற்ற வீரராகத் திகழ்கின்றார். இவருடன் இணைந்து யேசுதனும் இருப்பது அணியின் முன்கள வலிமையை உறுதி செய்கின்றது.

ஹில்லரியின் பின்களத்தில் இளைய வீரர்களும், அவர்களோடு நுட்பமறிந்த கோல் காப்பாளரும் அணிக்கு வலுச்சேர்க்கின்றனர்.

அணி விபரம்  

ஜெசுதன், டிலுக்சன், ஸ்ரெனிஸியஸ், சரத் பாபு, றஞ்சன், கேதீஸ்வரன், பாலதாஸ், லிவின்ரன், ரெஜிநாத், ஜெயநாதசீலன், நிரோசன், மயூரன், பிரசாந்தன், பிரசாத்லீர், டக்ளஸ், துலா

இந்த தொடரின் இறுதியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட குழு Dயில் அங்கம் வகித்த அணிகளான பாடும்மீன் மற்றும் நடப்புச் சம்பியன் சென் மேரிஸ் அணிகளைப் புறந்தள்ளி இறுதியில் மோதக் காத்திருக்கின்றன, குழு C இல் அங்கம் வகித்த ஹில்லரி மற்றும் யங் ஹென்றிஸ் அணிகள்.

இதன்படி தொடரின் 3ஆம் இடத்திற்கான போட்டியில் வடமராட்சியின் பலமான அணியாக திகழும் திக்கம் இளைஞர் அணியை எதிர்த்து மோதவுள்ளது, கிளிநொச்சியின் ஒரே அணியாக யாழ். மண்ணில் தடம்பதித்து நிற்கின்ற உருத்திரபுரம் அணி.

அதேபோன்று, வடக்கின் சுப்பர் கிங்-2016” கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் இளம் படையைக் கொண்டுள்ள பலமான இளவாலை யங் ஹென்றிஸ் அணியை எதிர்த்து, அணிக்கு ஏழு பேர் கொண்ட போட்டிகளில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த அனுபவம் வாய்ந்த அணியான மன்னார் ஹில்லரி அணி களம் காணவுள்ளது.

இந்த இறுதிக் கட்டப் போட்டிகளில் வெவ்வேறு கால்பந்து லீக்களைச் சேர்ந்த பலம் வாய்ந்த 4 அணிகள் களம் காண இருப்பதால், விறுவிறுப்பான போட்டிகளைக் காண ரசிகர்களின் ஆதரவு மிகையாக இருக்கும்என போட்டி ஏற்பாட்டுக்குழு எதிர்பார்க்கின்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டி – பெப்ரவரி 05ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு

இறுதிப் போட்டி – பெப்ரவரி 05ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு