பிறேக் பட்மின்டன் சம்பியன்ஷிப்பில் சிறந்த முறையில் விளையாடிய இலங்கை ஜோடி

211
Niluka Karunaratne and Dinuka Karunaratne

பிறேக் திறந்த பட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவடைந்தன.

செக் குடியரசின் பிறேக் நகரில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில் இம்முறை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட இலங்கையின் முன்னணி பட்மின்டன் வீரர்களான நிலுக கருனாரத்ன மற்றும் தினுக கருனாரத்ன ஆகியோர் சிறந்த முறையில் செயற்பட்டாலும் அவர்களால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இந்த தொடரின் முதல் நாளாக கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இரட்டையர்களுக்கான முதல் சுற்றில் நிலுக – தினுக ஜோடி, செக் குடியரசின் டேன் ப்ரெபெக் – ஜான் வோர்லிக் ஜோடியை எதிர்கொண்டனர். அதில் இலங்கை ஜோடி 21-14 மற்றும் 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டனர்.

பின்னர் இரண்டாம் நாளில் டென்மார்க் நாட்டு ஜோடி எமில் கிரிஸ்டென்சன் மற்றும் ரஸ்மஸ் ரய்லன்டர் ஆகியோரை 21-14 மற்றும் 21-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் நிலுக – தினுக ஜோடி வெற்றி கொண்டனர்.

அதே தினத்தில் இடம்பெற்ற ஒற்றையர் பிரிவில் தனது முதல் போட்டியில் தினுக கருனாரத்ன பின்லாந்து வீரர் ஏடோ ஹீனோவை எதிர்கொண்டார். அதில் அவர் முதல் இரண்டு சுற்றையும் 21-18 மற்றும் 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டார்.

அதே தினத்தில் இடம்பெற்ற அடுத்த இரட்டையருக்கான போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி, ரஷ்யாவின் ரொடியொன் அலிமொவ் மற்றும் வசிலி குஸ்னேசோவ் ஆகியோரை 21-13 மற்றும் 21-19 ஆகிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு தமது திறமையை மீண்டும் நிரூபித்தனர்.

அதேபோன்று, நிலுக கருனாரத்ன ஒற்றையருக்கான போட்டியில், செக் குடியரசின் மிலான் லடிக்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினாலும், நிலுக போட்டி முடிவில் 21-19 மற்றும் 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். எனினும் எதிர் வீரருக்கு நிலுக பாரிய சவால் கொடுக்கும் வகையிலேயே விளையாடினார்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் இடம்பெற்ற ஒற்றையருக்கான போட்டியில் தினுக, பிரான்சின் தோமஸ் ரொக்செலுடன் போட்டியிட்டார். அதில் தினுக 21-18 மற்றும் 21-13 என்ற புள்ளிகள் வீதத்தில் தோல்வியடைந்தாலும், அடுத்த போட்டியில் அவர் அமெரிக்காவின் ஜோன் செகுய்னை 21-12 மற்றும் 21-18 என்ற புள்ளிகள் வீதத்தில் தோல்வியடையச் செய்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற இரட்டையருக்கான அடுத்த போட்டியில் நிலுக – தினுக ஜோடி சிறந்த முறையில் விளையாடினாலும் சுவிடனின் ரிஷர்ட் ஈடெஸ்டெட் மற்றும் நிகோ ரபுனென் ஆகியோரிடம் 21-15 மற்றும் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தனர்.

எனினும் இந்த சுற்றுத் தொடரின் இரட்டையர் பிரிவில் இலங்கை ஜோடி மிகவும் சிறந்த முறையில் தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.