நியாயமான ஆட்ட விதிகளின் கீழ் கொலம்பியாவுடன் ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

282
Image Courtesy - Getty Images & AFP

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களின் கடைசி நாளான வியாழக்கிழமை (28) H குழுவில் நடைபெற்ற இரண்டு பரபரப்பான போட்டிகளில் செனகல் அணியை வீழ்த்தி கொலம்பிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதோடு போலந்திடம் ஜப்பான் அணி தோற்றபோதும் செனகலை விடவும் அந்த அணி குறைவான மஞ்சள் அட்டைகளைப் பெற்றதால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பை பெற்றது.

இதன்படி கொலம்பிய அணி மொத்தம் 6 புள்ளிகளுடன் H குழுவில் முதல் இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணி காலிறுதிக்கு முந்திய சுற்றில் G குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

>> வெற்றியை தவறாகக் கொண்டாடிய சுவிஸ் வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஆனால் இந்த குழுவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு செனகல் மற்றும் ஜப்பான் அணிகளிடையே சரிசமமான போட்டி ஏற்பட்டது. இந்த இரு அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றதோடு 4 கோல்களை பெற்றும் 4 கோல்களை விட்டுக்கொடுத்தும் இருந்தன. இதனால் போட்டியில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தது கருத்தில் கொள்ளப்பட்டது. இதன்படி செனகல் அணி ஐந்து மஞ்சள் அட்டைகளை பெற்றிருந்ததோடு ஜப்பான் அதனை விடவும் குறைவாக மூன்று மஞ்சள் அட்டைகளை பெற்றிருந்தமையால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன்படி உலகக் கிண்ண வரலாற்றில் நியாயமான ஆட்ட விதிகளின் (Fair play) கீழ் அடுத்த சுற்றுக்கு தேர்வாகும் அணி தீர்மானிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 

கொலம்பியா – செனகல்

சமரா அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் செனகல் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொலம்பிய அணி முதல் அரை மணி நேரத்தில் சற்று தடுமாற்றம் கண்டது. 16 ஆவது நிமிடத்தில் செனகல் கிட்டத்தட்ட பெனால்டி வாய்ப்பை நெருங்கியபோதும் வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் மூலமே அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கொலம்பிய நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் 31 ஆவது நிமிடத்தில் காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியது அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. ரொட்ரிகஸ் 2014 உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்று தங்கப் பாதணியை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செனகல் அணி முதல் பாதியில் பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்தபோதும் அந்த அணியால் கோல் ஒன்றை புகுத்த முடியாமல் போனது.

முதல் பாதி: செனகல் 0 – 0 கொலம்பியா

முதல் பாதி முழுவதிலும் கொலம்பிய அணியால் செனகல் பெனால்டி எல்லைக்குள் நுழைய முடியாமல்போனது. 57 ஆவது நிமிடத்தில் ரொட்ரிகஸுக்கு பதில் வீரராக வந்த லுவிஸ் முரியல் எதிரணி கோல் பகுதியை முதல் முறை ஆக்கிரமித்தார்.  

இந்நிலையில் செனகல் பின்கள வீரர்களை விடவும் உயரமான கொம்பியாவின் பின்கள வீரரான 6 அடி 5 அங்குல யெர்ரி மினா ஹெடர் மூலம் கோலொன்றைப்பெற்று கொலம்பிய அணியை முன்னிலை பெறச் செய்தார். குவின்டேரோ அடித்த கோனர் உதையையே அவர் 74 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றினார்.

>> பிரான்ஸை சமன் செய்த டென்மார்க் அடுத்த சுற்றில்: பெருவுக்கு 40 ஆண்டுகளில் முதல் வெற்றி

கடைசி 20 நிமிடங்களில் செனகல் பதில் கோல் ஒன்றைப் போட போராடியபோதும் அது தோல்வியில் முடிந்தது.

இதன்படி எந்த ஒரு ஆபிரிக்க அணியும் இம்முறை உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஏற்கனவே ஆபிரிக்க மண்டலத்தின் எகிப்து, டியூனீசியா, நைஜீரியா மற்றும் மொரோக்கோ அணிகள் வெளியேறின.  

1986இல் உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் ஒரு ஆபிரிக்க அணியேனும் அந்த சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல் முறையாகும்.

முழு நேரம்: செனகல் 0 – 1 கொலம்பியா

கோல் பெற்றவர்கள்

கொலம்பியா – யெர்ரி மினா 74′


ஜப்பான் எதிர் போலந்து

போலந்து அணி ஏற்கனவே உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய நிலையிலேயே வோல்கொக்ராட் அரங்கில் ஜப்பானை எதிர்கொண்டது. எனினும் ஜப்பான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த போட்டி தீர்க்கமாக இருந்தது.

அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியை வெல்ல வேண்டும் அல்லது சமநிலை செய்ய வேண்டும் என்ற நிலையில் ஜப்பான் அணி தனது நான்கு கோல்போடும் வீரர்களை ஆசனத்தில் அமரவைத்தே போட்டியை ஆரம்பித்தது. இதில் இரு வீரர்களை மாற்று வீரராக களமிறக்கியபோதும் அந்த அணிக்கு எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி பந்தை வலைக்குள் செலுத்த போராடியபோதும் கோல் எதுவும் பெறப்படவில்லை.

முதல் பாதி: போலந்து 0 – 0 ஜப்பான்

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமான சற்று நேரத்திலேயே போலந்துக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரபால் குர்சாவா எதிரணி கோலை நோக்கி உதைத்தபோது கோல் கம்பத்திற்கு அருகில் இருந்த ஜான் பெட்னரக் பந்தை வலைக்குள் புகுத்தினார்.

ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை

இதன் மூலம் போலந்து அணி முன்னிலை பெற்ற நிலையில் சமகாலத்தில் நடந்த செனகல் மற்றும் கொலம்பிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஜப்பானுக்கு வாழ்வா சாவா என மாறியது. ஜப்பான் அணி பதில் கோல் போடாமல் போட்டி முடிந்தபோதும் செனகல் அணியும் இதே 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்றது ஜப்பானுக்கு கடைசியில் சாதகமாக மாறியது.

ஜப்பான் அணி தனது உலகக் கிண்ண வரலாற்றில் குழுநிலை போட்டிகளில் இருந்து முன்னேற்றம் காண்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2002 மற்றும் 2010 உலகக் கிண்ணங்களில் அது இந்த சாதனையை நிகழ்த்தியது.  

முழு நேரம்: போலந்து 1 – 0 ஜப்பான்

கோல் பெற்றவர்கள்

போலந்து – ஜான் பெட்னரக் 59′   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…