T-20 உலக்கிண்ணத்தை முன்னிட்டு செவிப்புலனற்ற வீரர்களை வலுப்படுத்தவுள்ள இலங்கை கிரிக்கெட்

259
SLC

கிரிக்கெட் மாற்று திறனாளிகளை ஒன்றினைக்கும் விளையாட்டு எனக் கூறுவதில் மிகை ஏதுமிருக்காது. அந்தவகையில் 1995 ஆம் ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்டிருந்த இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சங்கம் (SLDCA) நாட்டிலுள்ள செவிப்புலனற்ற கிரிக்கெட் வீரர்களினை ஒன்றினைக்கும் நடவடிக்கைகளை திறம்பட செய்துவருவதுடன் அந்த வீரர்களின் வாழ்க்கையினை மாற்ற விளையாட்டும் ஒரு அங்கம் வகிக்க உதவிவருகின்றது.

இவற்றின் வெளிப்பாடாக, கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்த ஆற்றல்மிக்க செவிப்புலனற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டாளம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) தலைமை காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. இதில் கிரிக்கெட் விளையாட்டில் சாதிப்பதற்கு “கேட்டல் குறைபாடு” ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் காணப்பட்டிருந்த இளம் வீரர்கள் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் நாட்டின் முக்கிய பாகங்களான யாழ்ப்பாணம், காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் சேர்ந்து சிற்றுண்டிகளை பகிர்ந்து  கொண்டனர். சுமதிபால, இந்நிகழ்ச்சியில் அவ்வீரர்களின் எதிர்கால கிரிக்கெட்டினை முன்னெடுக்க வழிவகைகள் செய்யப்போவதினை உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் 2017 ஆம் ஆண்டிற்கான செவிப்புலனற்றோர் ஆசியக் கிண்ணத்தில் இராண்டம் இடத்தினை இலங்கை பெற்றதற்காக கிடைக்கப்பெற்றிருந்த கிண்ணத்தையும் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்தனர்.

செவிப்புலனற்றோருக்கான ஆசியக் கிண்ணத்தினை தமது கடின உழைப்பின் மூலம் இந்திய அணி கைப்பற்றியிருந்தது மேலும் அது, இந்திய அணிக்கு ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாகவும் மாறியிருந்தது. அவ்வணியினர் இலங்கையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரிலும் தடை தாண்டி சாதிப்பார்கள் என நம்பப்படுகின்றது.

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் சுமதிபால,  அடுத்த உலகக் கிண்ணத்தை மையப்படுத்தி வீரர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக வீரர்கள் அத்தொடரிற்கு ஆயத்தமாக தேவையாக இருப்பவற்றை பெற்றுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் இலங்கை செவிப்புலனற்றோர் வாரியத்திற்கு மைதான வசதிகள், பயிற்சிக்குரிய வசதிகளை பிரதான இடமான மொரட்டுவையில் இருந்து ஏனைய இடங்களிற்கு விரிவுபடுத்தல், வீரர்களின் உடற்தகுதியினை மேம்படுத்துவதற்குரிய உடற்பயிற்சி நிலையம், ஏனைய இதர உபகரணங்கள் ஆகியவற்றினையும்  பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இதற்கு மேலதிமாக கடந்த வருடம் செவிப்புலனற்றோர் சங்கத்தின் நிகழ்வுகளிற்கென “கிரிக்கெட் உதவி (Cricket Aid)”  மூலம் ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபா இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும் என்பதனையும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், நேற்று தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்வொன்றில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர் M. மதிவாணன் பேசியதலிருந்து எட்டு நாடுகள் பங்குபெறவுள்ள உலகக் கிண்ணத்தின் முதற் கட்டப்போட்டிகள் பெரும்பாலும் மொரட்டுவையிலும் ஏனைய முக்கிய போட்டிகள் கொழும்பிலும் நடைபெறும் என்று கூறியதை அவதானிக்க முடியுமாக இருந்தது.