SAG 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

150

தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார்.

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டதுடன், அவருடன் போட்டியிட்ட அஞ்சானி புலவன்ச வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வதற்காக ………..

அத்துடன், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான வினோஜ் சுரன்ஜய டி சில்வா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேபாளத்தில் உள்ள கத்மண்டு, பெக்கராவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் நேற்று (03) தொடங்கியதுடன், பெண்களுக்கான 1500 மீற்றரில் நிலானி ரத்நாயக்க முதல் தங்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன், மெய்வல்லுனர் போட்டிகளிள் முதல் நாள் முடிவில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.

இந்த நிலையில், மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் பதக்கம் வென்றார். இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 30 நிமிடங்களும் 49.20 செக்கன்களை எடுத்துக் கொண்டார்

கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய மட்டப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சண்முகேஸ்வரன், இன்றைய போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்

முன்னதாக இவர் 30 நிமிடங்களும் 30.38 செக்கன்களில் ஓடியதே சிறந்த நேரப் பெறுமதியாகப் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இந்திய வீரர் சுரேஷ் குமார் (29 நிமி. 33.61 செக்.), தங்கப்பதக்கத்தை வெற்றி கொள்ள, நேபாள வீரர் தீபக் அதிகாரி (30 நிமி. 50.06) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

இதேநேரம், குறித்த போட்டியில் இலங்கை சார்பாக உபுல் நிஷாந்த பங்குபற்றவிருந்த போதிலும், அவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தால் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டி வீரரான ஆர்.எம்.எஸ் புஷ்பகுமாரவை களமிறக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி, உபுல் நிஷாந்தவுக்குப் பதிலாக இன்று நடைபெற்ற 10,000 மீற்றரில் பங்குகொண்ட ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார போட்டியின் இடைநடுவே ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக விலகிக் கொண்டார்

சாரங்கிக்கு முதல் தங்கம்

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனரில் இலங்கைக்கான 2ஆவது தங்கப் பதக்கத்தை நீளம் பாய்தலில் மாற்று வீராங்கனையாகக் களமிறங்கிய சாரங்கி சில்வா வென்றெடுத்தார்.

குறித்த போட்டியில் பங்குபற்றவிருந்த விதூஷா லக்ஷானி உபாதை காரணமாக இன்று களமிறங்காத நிலையில், அவருக்குப் பதிலாக சாரங்கி சில்வா களமிறக்கப்பட்டார். இதன்படி, பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா 6.38 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கம் வென்றார். மற்றுமொரு இலங்கை வீராங்கனையான அஞ்சானி புலவன்ச 6.11 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட தேசிய சம்பியனான அமில ஜயசிறி 7.59 மீற்றர் தூரம் பாய்ந்து 4ஆவது இடத்தையும், கயான் சம்பத் 7.42 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

>>Photos: Day 4 | South Asian Games 2019<<

வெள்ளி வென்றார் வினோஜ்

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றதுடன், இதில் இலங்கை நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரும், 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமான வினோஜ் சுரன்ஜய டி சில்வா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். அவர் போட்டித் தூரத்தை 21.19 செக்கன்களில் கடந்தார்.

இதில் பாகிஸ்தான் வீரர் உசைர் ரஹ்மான் 21.15 செக்கன்களில் கடந்து தங்கத்தையும், ஆண்களுக்கான 100 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற மாலைதீவுகளின் சயிட் ஹசன் 21.22 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலத்தையும் வென்றனர்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 200 மீற்றரில் இலங்கை சார்பாக களமிறங்கி தகுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மொஹமட் சபான், இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 200 மீற்றரில் பங்குகொண்ட சர்மிளா ஜேன் 24.37 செக்கன்களில் ஓடிமுடித்து 4ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

200 மீற்றரில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்த அவர், பெண்களுக்கான 200 மீற்றரில் இவ்வருடத்தில் இலங்கை வீராங்கனையொருவர் பதிவுசெய்த அதிசிறந்த காலமாகவும் அது இடம்பிடித்தது.

அத்துடன், டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நதீஷா ராமநாயக்கவுக்குப் பதிலாக மாற்று வீராங்கனையாகக் களமிறங்கிய அமாஷா டி சில்வா 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். போட்டியை 24.54 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், தனது அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவு செய்தார்.

SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா!

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான…

இஷாராவுக்கு வெண்கலப் பதக்கம்

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இறுதி நேரத்தில் இலங்கை குழாத்தில் இடம்பிடித்த இஷாரா மதுவன்தி, பெண்களுக்கான தட்டெறலில் 41.29 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்படி, மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) இலங்கை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தது. எனவே, மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது

இதுஇவ்வாறிருக்க, ஒட்டுமொத்த பதக்கங்கள் அடிப்படையில் இந்தியா 34 பதக்கங்களுடன் முதலிடத்திலும், போட்டிகளை நடத்தும் நேபாளம் 29 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 9 தங்கங்களுடன் 3ஆவது இடத்திலும், 6 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளது.  

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<