இன்ஸ்டாகிராமிலும் அதிகம் சம்பாதிக்கும் விராட் கோஹ்லி

260

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம் மூலம் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் விளையாட்டு நட்சத்திரங்கள் சுவாரஸ்யமான விடயங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதிலும் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட அனுசரணை நிறுவனங்களின் பதிவுகளை பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம்

அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் அவர்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு என்பது ஆய்வு செய்து வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் சுமார் 1.8 மில்லியன் பவுண்டுகளுடன் (17.19 கோடி) போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மார் உள்ளனர். மெஸ்ஸி 1.2 மில்லியன் பவுண்டுகளும், நெய்மார் 1.1 மில்லியன் பவுண்டுகளும் ஈட்டியுள்ளனர்.

விராட் கோஹ்லி இப்பட்டியலில் ஆறாவது இடத்தினைப் பிடித்துள்ளார். கடந்த மார்ச் 12 முதல் மே 14 வரையிலான காலப்பகுதியில் கோஹ்லி சுமார் 379,294 பவுண்டுகள் (இந்திய ரூபாவில் 3.62 கோடி) சம்பாதித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் நிறுவனங்கள் பற்றிய விளம்பரப் பதிவுகளின் மூலம் அவர் இந்த வருமானத்தை ஈட்டியுள்ளார்

கோஹ்லி – ரோஹித் சிறந்த ஜோடி என்கிறார் சங்கக்கார

முதல் 10 வீரர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக உள்ள கோஹ்லி, ஊடரங்கு காலத்தில் இன்ஸ்டாகிராமில் 3 விளம்பரப் பதிவுகள் மட்டுமே வெளியிட்டுள்ளார்.

ஓவ்வொரு விளம்பரப் பதிவுக்கும் அவருக்கு சுமார் 1.21 கோடி ரூபா பணம் கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த பட்டியலில் கூடைப்பந்து வீரர் சாகுயில் நீல் (583628 பவுண்டுகள்), முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணித் தலைவர் டேவிட் பெக்கம் (405359 பவுண்டுகள்) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்

இவர்களைத் தவிர, இப்பட்டியலில் சுவிடன் கால்பந்து வீரர் இப்ராஹிமோவிக் (184,413 பவுண்டுகள்), பிரேசில் கால்பந்து வீரர் டேனி அல்விஸ் (133,694 பவுண்டுகள்), குத்துச்சண்டை வீரர் அண்டனி ஜோஸ்வா (121,500 பவுண்டுகள்) ஆகியோரும் அதிகம் வருமானம் ஈட்டிய முதல் 10 வீர்ர்கள் பட்டியலில் உள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<