நியூசிலாந்து மகளிர் அணியின் இலங்கை சுற்றுப் பயணம் பிற்போடப்பட்டது!

89
ICC

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்தமை, திகதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த மாதத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதில், முக்கியமாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, நாட்டிலிருந்து உடனடியாக தங்களுடைய சொந்த நாட்டை சென்றடைந்திருந்தது.

ஓய்வை அறிவித்த நியூசிலாந்தின் டேனியல் ப்லைன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேனியல் ப்லைன் அனைத்து வகையிலான ………..

இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை குறைவடையாத நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த இலங்கை மகளிர் அணிக்கு எதிரான நியூசிலாந்து மகளிர் அணியின் சுற்றுப் பயணம் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வைட் வெளியிட்டுள்ளார். அதேநேரம், நியூசிலாந்து ஆடவர் அணி எதிர்வரும் ஜூன் மாதத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் பிற்போடப்படலாம் என்ற சந்தேகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்திருந்தது. இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் தொடர் உட்பட நியூசிலாந்து அணியின் ஏனைய தொடர்கள் பிற்போடப்படுமாயின், போட்டியை நடத்தும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்துள்ள டேவிட் வைட், குறித்த தொடர் நடைபெறுவதற்கு காலம் இருப்பதாகவும், அதனால், இதுதொடர்பான முடிவை இப்போது எடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் இலங்கைப் பயணம் பிற்போட வாய்ப்பு

ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க…….

டேவிட் வைட் மேலும் குறிப்பிடுகையில், “விளையாட்டுடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் இதுவொரு ஏமாற்றத்துக்குறிய காலப்பகுதிதான். ஆனால், மறுபக்கம் கொவிட்-19 வைரஸ் செலுத்தி வரும் தாக்கம் மிகவும் பாரதூரமானது. எனவே, எம்முடையவர்களை மாத்திரம் பார்க்காமல், அனைவரது நிலைமைகளையும் பார்க்க வேண்டும்.

மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்கள் பிற்போடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனினும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான காலம் இருப்பதால், எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<