உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கையின் திட்டம் பற்றி திமுத் விளக்கம்

2588
Dimuth Karunaratne
 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே எதிர்பார்ப்பதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார். 

காலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கைக்கு வரலாற்று வெற்றி

அதேபோன்று இந்த வெற்றி மூலம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 60 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கும் இலங்கை அணியால் முடிந்தது. எனினும் 2021 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை அணியின் திட்டம் பற்றி கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன,

“டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் போட்டிக்கு போட்டி தான் நாம் திட்டமிடுகிறோம். இரண்டாவது ஆண்டு முடியும்போது நாம் எங்கே இருப்போம் என்று இப்போதே எம்மால் கூற முடியாது. இலங்கையில் நடைபெறும் போட்டிகளை எப்படியாவது வெற்றி பெறவே நாம் முயல்கிறோம். 

அப்போது வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் அந்தந்த அணிகளுக்கு அமைய எவ்வாறு விளையாடுவது, போட்டியை வெல்ல முடியுமா, சமநிலை செய்ய முடியுமா என்பது பற்றி திட்டமிட நாம் எதிர்பார்க்கிறோம். இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டி உள்ளது. 

இப்போது நாம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்திருக்கிறோம். எதிர்வரும் போட்டிகளில் வென்று இரண்டு ஆண்டுகளில் அந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்” என்று காலி டெஸ்ட் போட்டி முடிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திமுத் குறிப்பிட்டார். 

இரண்டு ஆண்டு காலத்தைக் கொண்டதான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுடன் ஆரம்பமானதோடு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்தக் காலப்பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் இரு அணிகள் சம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன.   

இந்நிலையில் அணிக்கு அதிக உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் தான் வழங்கி இருப்பதாகவும் திமுத் கருணாரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். 

எமது வீரர்கள் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் – ருமேஷ் ரத்னாயக்க

“நான் அதிகம் சுதந்திரமாக விளையாட வாய்ப்பு வழங்குவதை விரும்புகிறேன். இன்று குசல் ஜனித் மற்றும் குசல் மெண்டிஸ் விளையாடிய விதத்தை பார்த்தால் புரியும். குறைந்த ஓட்டங்கள் எடுக்க இருந்தபோதும் இரண்டு விக்கெட்டுகள் குறுகிய நேரத்தில் விழுந்ததால் அதிக அழுத்தத்திற்கு முகம்கொடுக்கிறோம். இந்த இருவரும் வேகமாக துடுப்பாடினார்கள். இவ்வாறான ஆடுகளங்களில் அதுதான் நடைபெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

சற்று வேகமாக துடுப்பாடி களத்தடுப்பாளர்களை பின்னோக்கி செலுத்துவதன் மூலம் ஓட்டங்களை பெற முடியும் என்றால் நன்றாக இருக்கும். அவ்வாறான சாதகமான மனநிலையையே வீரர்களுக்கு நான் கொடுத்திருக்கிறேன். அது நன்றாக செயற்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அதுவே அணியில் இருக்கும் பிணைப்பை அதிகரிக்கிறது. 

உற்சாகம் மற்றும் சுதந்திரத்தையே அணியினருக்கு நான் கொடுத்திருக்கிறேன். அதனால் அவர்கள் நல்ல பயன்பெறுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். 

268 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி கடைசி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தனது 9 ஆவது சதத்தை பெற்றார். இலங்கை அணி வெற்றி இலக்கை நெருங்கியபோது குசல் பெரேரா 19 பந்துகளில் வேகமாக 23 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு குசல் மெண்டிஸ் 1 பௌண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 10 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். 

“அணியின் நிலை குறித்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி சில மாதங்கள் மற்றும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் நாம் சிறப்பாக செயற்பட்டோம். உலகக் கிண்ண போட்டிகளிலும் பெரும்பாலும் நன்றாக செயற்பட்டோம். எமது அணி மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். வெற்றி பெற, வெற்றி பெற அவர்களின் உறுதி அதிகரிக்கும் நிலை உள்ளது” என்றும் அவர் கூறினார்.

இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க நீக்கப்பட்டு இடைக்காலப் பயிற்சியாளர் ரொமேஷ் ரத்னாயக்கவின் பயிற்சியின் கீழே இலங்கை அணி நியூசிலாந்துடனான தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை கிரிக்கெட் சபை புதிய பயிற்சியாளரை தேட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் எதிர்கால பயிற்சியாளர் குறித்தும் திமுத் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார். 

இலங்கையுடனான டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த டிம் சௌத்தி

“பயிற்சியாளர்களிடம் உற்சாகமளிப்பதைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். தொழில்நுட்ப விடயங்களை விடவும் வீரர்களை ஊக்குவிப்பது தான் முக்கியமானதாக இருக்கும். எதிர்காலத்தில் யாராவது பயிற்சியாளர் வருவதாக இருந்தால் உற்சாகம் அளிப்பதைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்” என்றார்.    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<