68 வயதில் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

351
Image courtesy - ROSA WOODS/STUFF

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவென் செட்வீல்ட் தனது 68 ஆவது வயதில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவதாக அறிவித்துள்ளார்.

கடைசியாக 1989 மற்றும் 1990 காலப்பகுதியில் முதல்தரப் போட்டியில் பங்கேற்ற பின்னர், கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர், நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள நெனி ஓல்ட் போய்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் நெனி ஓல்ட் போய்ஸ் அணிக்காக விளையாடிய அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கோஹ்லி இல்லாத இந்தியாவை 92 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் …

நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தி நெனி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுகின்றவருமான இவென் செட்வீல்ட், 1975ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக 43 டெஸ்ட் மற்றும், 114 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர், டெஸ்ட் போட்டிகளில் 123 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  

தற்போது 68 வயதாகும் இவென் செட்வீல்ட், 51 வருடத்திற்கு முன் தனது 17ஆவது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் 1974/75இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்தின் பீட்டர் லிவர் இவரது பந்தை எதிர்கொள்ளும்போது, பந்து தலையை தாக்கியது. இதனால் நாக்கு உள்ளிழுக்கப்பட்டு, அவர் மயக்க நிலையை அடைந்தார். அப்போது சமயோசிதமாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணியின் உடற்கூற்று நிபுணர் பெர்னார்ட் தோமஸின் உடனடி முதலுதவியால் அவர் உயிர்பிழைத்தார். பின்னர், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், அவருக்கு நினைவு திரும்பியது.

நியூசிலாந்து அணியின் புகழ்பெற்ற வேகப்பந்துவீச்சு ஜாம்பவானான ரிச்சர்ட் ஹேட்லியின் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த இவர், இங்கிலாந்தில் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். எனினும், 1989இல் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.

தொடரை தீர்மானிக்கும் மோதலில் இலங்கை ஆஸியை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான …

பின்னர், வெலிங்டனில் உள்ள நெனி ஓல்ட் போய்ஸ் (Naenae Old Boys Cricket Club) அணிக்காகத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், அந்த அணிக்காக கடந்த சனிக்கிழமை கடைசிப் போட்டியில் களமிறங்கியிருந்தார். எனினும், முதல் பந்திலே ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அந்த கழகத்துக்காக தனது 17ஆவது வயதில் அறிமுகமான இவென் செட்வீல்ட், 51 வருடங்கள் அந்த அணிக்காக விளையாடியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதுஇவ்வாறிருக்க, 1984ஆம், 1987ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியில் இடம்பெற்ற இவென் செட்வீல்ட், கிரிக்கெட் விளையாட்டுக்கு வழங்கிய சேவையை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியாவின் எம்.பி. கௌரவ விருதையும் பெற்றுக்கொண்டார்.

தனது ஓய்வு குறித்து இவென் செட்வீல்ட் போட்டிக்குப் பினனர் பேசுகையில், “இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். எனக்கென்று தர நிலைகள் இருக்கின்றன. இந்த 68 வயதிலும் அந்த தர நிலையில் என்னால் விளையாட முடியவில்லை என்றால், ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

பொதுமன்னிப்புக் காலத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளதாக ஐ.சி.சி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் ….

இதன்மூலம் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் வரிசையில் அவர் இணைந்து கொண்டார். இங்கிலாந்தில் வில்பிரெட் ரோட்ஸ், தனது 52ஆவது வயதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.

1963இல் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் மகாராஷ்ட்ரா முதல்வர் பதினொருவர் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியபோது இந்திய அணியின் முன்னாள் வீரர் சி.கே.நாயுடுவுக்கு 69 வயதாகும். அதேபோல, பொதுநலவாய (கொமன்வெல்த்) பதினொருவர் அணிக்கெதிரான போட்டியில் மும்பை ஆளுநர் பதினொருவர் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ராஜா மகாராஜ் சிங்கின் வயது 75 ஆகும்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<