ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Afghanistan tour of Sri Lanka 2022

1620

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி ஒருநாள் சுபர் லீக் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள இலங்கை குழாத்தில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் அணியின் முன்னணி சகலதுறை வீரராக இருந்துவந்த சாமிக்க கருணாரத்ன மோசமான பிரகாசிப்புகள் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

>> புதிய வடிவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் 2024!

அதுமாத்திரமின்றி அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க தடைக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெதும் நிஸ்ஸங்கவுடன், குசல் மெண்டிஸ் அல்லது தினேஷ் சந்திமால் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த ஜெப்ரி வெண்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மந்த சமீர (உபாதை), ரமேஷ் மெண்டிஸ், லஹிரு மதுசங்க, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் நுவான் துஷார ஆகியோர் அணியில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அதேநேரம் T20 உலகக்கிண்ணத்தில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோருடன், அஷேன் பண்டார அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுடன் இலங்கை அணிக்காக ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்த சகலதுறை வீரர் தனன்ஜய லக்ஷான் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்குறித்த மாற்றங்களை தவிர்த்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய தினேஷ் சந்திமால், துனித் வெல்லாலகே, பிரமோத் மதுசான் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தொடர்ந்தும் அணியில் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

>> ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி? | Sports RoundUp – Epi 225

அதேநேரம் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக ராஜபக்ஷ இந்த தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடரில் விளையாடுவதற்காக அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியுள்ளார். எனவே பானுக ராஜபக்ஷ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளதுடன், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, தனன்ஜய லக்ஷான், கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<