கோஹ்லி இல்லாத இந்தியாவை 92 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து

181

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியுள்ளது.

விராட் கோஹ்லிக்கு நியூசிலாந்து தொடரில் திடீர் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லியின் சுமையை….

நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருக்கும் நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் சுப்மான் கில் அறிமுக வீரராக அணியில் இணைக்கப்பட்டிருந்ததுடன் தனது 200 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய ரோகித் ஷர்மா அணியை தலைமை தாங்கி வழிநடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. போல்ட் மற்றும் கிரன்ட்ஹோம் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சில் இந்திய அணி 92 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒருநாள் போட்டிகளில் தமது 7ஆவது குறைந்த ஓட்டங்கள் என்ற மோசமான சாதனையை பதிவு செய்திருந்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் எந்த ஒரு வீரரும் 20 ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை என்பதும் இந்திய அணியின் இன்றைய மோசமான துடுப்பாட்டத்திக்கு எடுத்துக்காட்டாகும். பந்து வீச்சில் 10 ஓவர்கள் வீசிய போல்ட் நான்கு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 21 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன் கிரன்ட்ஹோம் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

தொடர் தோல்வியை தொடர்ந்து நியூசிலாந்து குழாமில் திடீர் மாற்றம்

இந்திய அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான…….

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி சார்பில் முதல் பந்திலே சிக்சருடன் தமது ஆட்டத்தை தொடங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகளையும் விளாசி அதே ஓவரிலே ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இரண்டு விக்கெட்டுகள் மாத்திரம் வீழ்த்தப்பட்ட நிலையில் ஹென்றி நிக்கோலஸ் மற்றும் ரோஸ் டைய்லர் ஆகியோர் இணைந்து 14.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தனர்.

212 பந்துகள் மீதமிருந்த நிலையில் போட்டியை நிறைவு செய்ததன் மூலம் இந்திய அணி அதிக பந்துகள் மீதமிருந்த நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்ததும் அவர்களின் மோசமான சாதனையாக பதியப்பட்டிருந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக போல்ட் தெரிவாகியிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

இந்திய அணி – 92 (30.5) – சஹால் 18*, போல்ட் 21/5,  கிரன்ட்ஹோம் 26/3

நியூசிலாந்து அணி – 93/2 (14.4) – டைய்லர் 37*,  நிக்கோலஸ் 30*, புவனேஷ்வர் குமார் 25/2

முடிவு : நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி