ஆறு மாதங்களில் புதிய விளையாட்டு சட்டம் – நாமல் ராஜபக்ஷ

223

நவீன உலகிற்கும் பொருந்தும் வகையில் இலங்கையின் விளையாட்டு சட்டத்தை எதிர்வரும் அறு மாதங்களுக்குள் திருத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றது. 

தற்போதுள்ள, 1973ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாகவும், புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று நேற்று (03) இடம்பெற்றது.

இலங்கை விளையாட்டில் நாமல் ராஜபக்ஷ எனும் புது அவதாரம்

குமார் சங்கக்கார உள்ளிட்ட தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த சந்திப்பின் போது எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கையின் விளையாட்டு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், முதலாவது மாதத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் அதற்குரிய நகல் பத்திரம் ஒன்றை தயாரிக்க வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன், குறித்த நகல் பத்திரத்துக்கு அமைய திருத்தங்களை செய்வதற்கு இரண்டு அமைச்சுக்களினதும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அந்தக் குழுவில் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைபு திணைக்கள அதிகாரிகளை இணைத்துக்கொள்ளவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்டி, இரண்டு அமைச்சுக்களினதும் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பெற்று அது தொடர்பில் சட்டவரைபொன்றை தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மீண்டும் இரு அமைச்சுக்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்துரையாடி இணை அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் தற்போதுள்ள விளையாட்டு சட்டம் 1973இல் உருவாக்கப்பட்டது. அப்படியானால் திறந்த பொருளாதாரம் வருவதற்கு முன் உருவாக்கப்பட்ட சட்டமாக அது உள்ளது. ஆனால் இன்று விளையாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விளையாட்டு வணிக மயப்படுத்தப்பட்டுள்ளது

எனவே, 50 வருடங்கள் பழமையான விளையாட்டு சட்டத்துடன் எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியாது. எனவே, எமது ஆட்சியில் நிச்சயம் புதிய விளையாட்டு சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.  

தற்போது நாங்கள் அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். எனவே, இன்னும் ஒன்றரை வருடங்களில் புதிய விளையாட்டு சட்டத்தை உருவாக்க முடியும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.  

இதில் கலந்துகொண்டு பேசிய நீதி அமைச்சர் அலி சப்ரி, “பல தசாப்தங்கள் பழமையான இலங்கையின் விளையாட்டு சட்டத்தினால் இந்நாட்டின் விளையாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வது கடினம். எனவே அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு சட்டரீதியான அனுகுமுறையுடன் மிக விரைவில் புதிய விளையாட்டு சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது நீதி அமைச்சின் செயலாளர் பிரியன்த மாயாதுன்ன, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…