மெக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

392
Image Courtesy - espncricinfo

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் நேற்று (27) இடம் பெற்ற இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாஅணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இவ்வெற்றியானது அவுஸ்திரேலிய அணி 2008ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணியுடன் டி20 தொடரில் வெற்றி பெறும் முதலாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 போட்டியில் இறுதிப் பந்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்கியது. இந்திய அணி இப்போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற காரணத்தால் நேற்றைய போட்டியில் கடந்த போட்டியில் சோபிக்க தவறிய ரோகித் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் மயான்க் மார்கன்டே ஆகியோர் நீக்கப்பட்டு ஷிகர் தவான், விஜய் சன்கர் மற்றும் சித்தார் கௌல் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

இறுதிப் பந்தில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த அவுஸ்திரேலியா

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சத்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியிருந்தது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றை அணிக்கு வழங்கியிருந்தது. கடந்த போட்டியில் அரைச்சதம் பெற்ற ராகுல் இப்போட்டியில் 26 பந்துகளில் 47 ஓட்டங்களை அதிரடியாக விளாசியிருந்தார். எனினும் தவான் (14) மற்றும் ரிஷாப் பாண்ட் (1) என குறைந்த ஓட்டங்களை பெற்று வெளியேறினர்.

74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணிக்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோரின் அதிரடி ஆட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியது. இருவரும் இணைந்து 100 ஓட்டங்கள் பெற்றிருந்த போது டோனி 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடிய கோஹ்லி 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, க்லென் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட சதத்தின் உதவியால் வெற்றி இலக்கை கடந்து தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டிருந்த போது டார்சி ஷோர்ட் உடன் கைகோர்த்த மெக்ஸ்வெல் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய அவ்வணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 95 ஆக இருந்த போது ஷோர்ட் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறத்தில் தனது அதிரடியை தொடர்ந்த மெக்ஸ்வெல் டி20 சர்வதேச போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 194 ஓட்டங்களை பெற்று7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த மெக்ஸ்வெல் 55 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்களாக 113 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

டி-20 அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய சுரேஷ் ரெய்னா

முதல் போட்டியில் அரைச்சதம் மற்றும் இரண்டாவது போட்டியில் சதம் கடந்து அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு பங்காற்றிய க்லென் மெக்ஸ்வெல்லுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 190/4 (20) – விராட் கோஹ்லி 72*, லோகேஷ் ராகுல் 47, MS டோனி 40, பேஹ்ரன்டோப் 17/1

அவுஸ்திரேலியா – 194/3 (19.4) – க்லென் மெக்ஸ்வெல் 113*, ஷோர்ட் 40, விஜய் சங்கர் 38/2

முடிவு – அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<