20 வருடங்களுக்குப் பிறகு தேசிய சாதனையை முறியடித்த சுரன்ஜய

152

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்யும் தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டத்தின் முதல் நாள் போட்டிகள் இன்றைய தினம் (27) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

இதில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 20 வருடங்கள் பழமையான தேசிய சாதனையை 0.01 செக்கன்களினால் வர்த்தக நிறுவனங்கள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட நட்சத்திர குறுந்தூர வீரர் சுரன்ஜய டி சில்வா முறியடித்தார்.

முன்னதாக ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுரன்ஜய, குறித்த போட்டியை 20.84 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்தார்.

இதனையடுத்து இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியை 20.68 செக்கன்களினால் நிறைவு செய்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டியில் அனித்தா, ஹெரினாவுக்கு வெற்றி

இதற்கு முன் 1998 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் முன்னாள் குறுந்தூர வீரர் சுகத் திலகரத்ன 20.69 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து நிலைநாட்டிய சாதனையை 20 வருடங்களுக்குப் பிறகு சுரன்ஜய டி சில்வா முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணிக்காக பல்வேறு வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற சுரன்ஜய, அண்மையில் அவுஸ்திரேலியாவில் நிறைவுக்கு வந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை அஞ்சலோட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார். இதில் இலங்கை அஞ்சலோட்ட அணி, சுமார் 68 வருடங்களுக்குப் பிறகு 4×100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்ததுடன், குறித்த போட்டியில் இலங்கை அணி, தேசிய சாதனையொன்றையும் நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம் குறித்த போட்டியில் சுரன்ஜயவுடன் போட்டியிட்ட தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் (21.37 செக்.), இரண்டாவது இடத்தையும், திலிப் ருவன் (21.37 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த போட்டிப் பிரிவில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிழக்கு மாகாண வீரர் பாசில் உடையார், 22.01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக இன்று காலை நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் கலந்துகாண்ட அவர், போட்டியை 22.10 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.