தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன

294

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன, ஜேர்மனியில் இன்று  (09) நடைபெற்ற சர்வதேச டிஸ்ஸவ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்று புதிய தெற்காசிய சாதனை படைத்தார்.

இதன்படி, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்த அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்தார்

முன்னதாக 2016இல் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரரான ஹிமாஷ ஷான் 10.22 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை நான்கு வருடங்களுக்குப் பிறகு யுபுன் ப்ரியதர்ஷன முறியடித்திருந்தமை சிறப்பம்சமாகும்

அத்துடன், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் ஐரோப்பாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டித் தொடரொன்றில் இலங்கை வீரரொருவர் வெற்றி பெறுவது இதுவே முதல்தடவையாகும்

பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் இலங்கை சாதனை படைத்த ஹிருனி

இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கையில் எந்தவொரு மெய்வல்லுனர் விளையாடுட்டும் ஆரம்பிக்காவிட்டாலும், தற்போது இத்தாலியில் வசித்து வருகின்ற யுபுன் ப்ரியதர்ஷன, கடந்த முதலாம் திகதி யேமன் நகரில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் முதல்தடவையாகக் களமிறங்கினார்

குறித்த போட்டித் தொடரின் முதல் சுற்றை 10.29 செக்கன்களில் ஓடி முடித்த அவர், இறுதிப் போட்டியை 10.32 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்

வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் பழைய மாணவனான யுபுன் ப்ரியதர்ஷன, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் அனுசரணை மற்றும் மேற்பார்வையின் கீழ், கடந்த சில வருடங்களாக இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றார். 

இறுதியாக அவர், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொண்டு ஆண்களுக்கான 100 மீற்றரில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 10.44 செக்கன்களில் நிறைவு செய்தார்

அதனைத்தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்

அந்தப் போட்டியை 39.14 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணி, 15 வருடங்கள் பழமையான தெற்காசிய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இலங்கை மெய்வல்லுனர்களை பயிற்றுவிக்க வரும் பின்லாந்து பயிற்சியாளர்

இதனிடையே, உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கை வரமுடியாமல் சிக்கிய இலங்கை வீரர்களில் இவரும் ஒருவர்

இந்த நிலையில், தனது வெற்றி குறித்து யுபுன் ப்ரியதர்ஷன எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில்,

”கோவிட் – 19 வைரஸுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட மூன்றாவது போட்டி இதுவாகும். போட்டியின் போது காலநிலை சீராக இருந்தது. இத்தாலி மற்றும் ஜேர்மனியில் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெறுகின்ற கடைசி மாதம் இதுவாகும். 

உண்மையில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு தங்கியிருந்து பயிற்சிகளை எடுத்து தெற்காசிய மற்றும் இலங்கை சாதனையை முறியடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தைப் பதிவுசெய்ய நான் நிறைய கஷ்டப்பட்டேன். 

குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதில் நிறைய நன்மைகள் உண்டு. எனக்கு அதில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

மேலும், தற்போதைய தனது நிலைமை குறித்து கருத்து தெரிவித்த யுபுன், மெய்வல்லுனர் பயிற்சிகளுக்காக நான் இத்தாலியில் வசித்து வருகிறேன். தற்போது ஏனைய நகரங்களை விட இங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது. றோம் நகரில் உள்ள வினையாட்டு அகடமியில் நான் தங்கியுள்ளேன். உண்மையில், இங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சிறப்பாக உள்ளது. 

அதுமாத்திரமின்றி, தற்போது இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது. கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்தில் மிகப் பெரியளவில் நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. 

எனினும், இத்தாலியின் சுகாதாரப் பிரிவினர் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும். அதனால் இங்குள்ள நிலைமை குறித்து நான் பயப்படவில்லை. 

நான் இலங்கையில் பன்னல என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன். இந்த வைரஸின் தாக்கம் வியாபிக்க முன் இலங்கைக்கு திரும்பி வருமாறு எனது பெற்றோர்கள் கேட்டனர். ஆனால், பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் நான் இங்கேயே தங்குவதற்கு தீர்மானித்தேன். 

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய இலச்சினை அறிமுகம்

இதனிடையே, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமைகள் மற்றும் எனது ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். 

அதேபோல, இலங்கை இராணுவத்தில் நாள் பொறியியல் மற்றும் இலத்திரனியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருகிறேன். அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். எனவே, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.  

இதேவேளை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான வீரர்களைத் தெரிவு செய்கின்ற தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொள்ள யுபுன் ப்ரியதர்ஷன இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<