இந்த LPL இல் புதிய உரிமையாளர்களுடன் கண்டி அணி

271
New Kandy franchise owners announced

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் புதிய பருவத்தில் கண்டியினை பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு புதிய உரிமையாளர்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்ட தென்னாபிரிக்க A அணி

LPL தொடரின் நான்காவது பருவத்திற்கான போட்டிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவிருக்கின்றன. இந்த நிலையில் தொடரின் முன்னைய பருவங்களில் மூன்று வெவ்வேறு உரிமையாளர்களுடன் கண்டி அணி விளையாடியிருந்த நிலையில் தற்போது நான்காவது பருவத்தில் மீண்டும் புதிய உரிமையாளர்களை கண்டி அணி பெற்றிருக்கின்றது.

அதன்படி கண்டி அணியின் புதிய உரிமையாளர்களாக H.H. ஷெய்க் மர்வான் பின் மொஹமட் பின் ராஷீட் அல் மக்தூம் மற்றும் ஓமர் கான் ஆகியோர் மாறியிருக்கின்றனர்.

புதிய உரிமையாளர்களை கண்டி அணி பெற்றிருக்கும் நிலையில் இந்தப் பருவகாலத்தில் கண்டி அணியின் புதிய பெயரும், பீலவ் கண்டி (B-Love Kandy) என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கண்டி அணியின் புதிய உரிமையாளர்கள் கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னர் அனுசரணை வழங்கிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றனர். அந்தவைகயில் இதற்கு முன்னர் கண்டி அணியின் புதிய உரிமையாளர்கள் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இருதரப்பு தொடர் மற்றும் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) என்பவற்றுக்கு அனுசரணை வழங்கியதனை உதாரணமாக குறிப்பிடலாம். அத்துடன் இது கண்டி அணி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஒரு தரப்பு, LPL தொடரில் இணைந்திருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

>> கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழாம் அறிவிப்பு

மறுமுனையில் கண்டி அணியின் புதிய உரிமையாளர்கள் கருத்து வெளியிட்ட போது கண்டி அணியுடன் இணைந்தது மிகவும் சந்தோசம் தருவதாக தெரிவித்ததோடு, இம்முறை LPL தொடரில் கண்டி அணியினை சிறந்த பெறுபேறு ஒன்றினை பெறுவதற்கு வழிநடாத்த எத்தனிப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜூன் மாதம் 14ஆம் திகதி LPL தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் கண்டி அணி இந்தப் பருவகாலத்திற்கான LPL தொடரில் சர்வதேச அரங்கில் அசத்திவருகின்ற கிரிக்கெட் வீரர்களான ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான், பாகிஸ்தானின் பக்கர் சமான், வனிந்து ஹஸரங்க மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரை நேரடி ஒப்பந்தம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<