இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்ட தென்னாபிரிக்க A அணி

South Africa A tour of Sri Lanka 2023

111

இலங்கை A அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க A அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.

முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் முறையே வெற்றிகளை பதிவுசெய்திருந்தன. எனவே தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று வியாழக்கிழமை (8) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

>>ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்; இலங்கை குழாம் அறிவிப்பு<<

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க A அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை A அணிக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த அளவிலான ஆரம்பம் கிடைக்கவில்லை. ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது முதலிரண்டு விக்டிகெட்டுகளையும் இழந்ததுடன், 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் அதன்பின்னர் ஓரளவான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்த அஷேன் பண்டார 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த சஹான் ஆராச்சிகே அரைச்சதம் கடந்து 63 ஓட்டங்களை பெற்றார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் மீண்டும் தடுமாறிய இலங்கை அணி 42.3 ஓவர்களில் 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஷி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க A அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அதனைத்தொடர்ந்து களமிறங்கிய டிரிஷ்டன் ஸ்டப்ஸ் அணியின் வெற்றிக்காக நிதானமாக ஆடினார்.

>>WATCH – சமீரவின் மீள்வருகையுடன் பலம் பெற்றுள்ளதா இலங்கையின் பந்துவீச்சு?<<

மறுமுனையில் மேலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் ஸ்டப்ஸ் 58 ஓட்டங்களையும், செனுரன் முத்துசாமி 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற 35.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் டில்சான் மதுசங்க மீண்டும் ஒருமுறை சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

எவ்வாறாயினும் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்துவரும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடரின் முதல் போட்டி திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ளது.

>>https://stats.thepapare.com/cricket/match/sri-lanka-a-vs-south-africa-a-3rd-unofficial-odi<<

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<