பார்சிலோனா கழகத்துடன் இணையும் கிரீஸ்மன்

204

உலகக் கிண்ண வெற்றி வீரரான பிரான்ஸின் அன்டோயின் கிரீஸ்மனை (Antoine Griezmann) தனது லா லீகா அணியான அட்லெடிகோ மெட்ரிட்டிடம் இருந்து 120 மில்லியன் யூரோவுக்கு பார்சிலோனா ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 

பிரான்ஸ் முன்கள வீரரான 28 வயது கிரீஸ்மன் கடந்த ஆண்டு பார்சிலோனா கழகத்திற்கு செல்வதை நிராகரித்த நிலையில் தான் மெட்ரிட் அணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த மே மாதம் குறிப்பிட்டிருந்தார். 2014 ஆம் ஆண்டு ரியல் சொசிடாட்டில் இருந்து வெளியேறிய பின் கடந்த ஐந்து பருவங்களாக அவர் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்காக விளையாடினார். 

“அட்லெடிகோ மெட்ரிட்டிடம் இருந்து அன்டொயின் கிரீஸ்மனை விடுவிப்பதற்கு பார்சிலோனா 120 மில்லியன் விலை (buyout clause) கொடுத்தது” என்று லா லீகா சம்பியனான பார்சிலோனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Road to Barcelona நிகழ்வுக்கு இம்முறையும் இலங்கையில் இருந்து எட்டுப் பேருக்கு வாய்ப்பு

“அவர் 2024 ஜுன் 30 ஆம் திகதி வரை 800 மில்லியன் யூரோ வீரர் பரிமாற்ற விலையுடன் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு தமது கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வார்” என்று பார்சிலோனா குறிப்பிட்டுள்ளது. 

இதன் மூலம் கிரீஸ்மனை பெற்றுக்கொள்ளும் பார்சிலோனாவின் நீண்ட கால முயற்சி வெற்றி அளித்துள்ளது. அந்த கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் கிரீஸ்மன் மீது அவதானம் செலுத்தி வருகிறது.   

எனினும் அவர் ‘தி டிசிசன்’ என்ற ஆவணத்தில் பார்சிலோனா தன் மீது வலைவிரித்திருப்பது குறித்து விமர்சித்தது அவருக்கும் அந்தக் கழகத்திற்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் அவர் அட்லெடிகோவுடன் 2023 ஆம் ஆண்டு வரை புதிய ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டதோடு அதில் வீரர் பரிமாற்றத் தொகையாக 200 மில்லியன் யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது கடந்த ஜூலை 1 ஆம் திகதி 120 மில்லியன் யூரோக்களாக குறைக்கப்பட்டது. 

இதன்படி அவர் நெய்மர், கைலியான் ம்பப்பே (Kylian Mbappé), பிலிப்பே கோடின்ஹோ, ஜோ பிலிக்ஸ் மற்றும் ஒஸ்மானே டெமெபேலேவுக்கு (Ousmane Dembélé) அடுத்து உலகின் ஆறாவது அதிக விலைகொண்ட வீரராக மாறியுள்ளார்.  

கிரீஸ்மன் தான் அட்லெடிகோ அணியில் விளையாடிய காலத்தில் யுரோப்பா லீக், ஸ்பானிஷ் சுப்பர் கப் மற்றும் யூரோபா சுப்பர் கப் பட்டங்களை வென்றிருப்பதோடு கடந்த ஐந்து பருவங்களிலும் அந்த கழகத்திற்காக அதிக கோல் பெற்றவராக சாதனை படைத்துள்ளார். 

இந்தப் பருவத்தில் பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தமாகும் நான்காவது வீரராகவும் அவர் உள்ளார். முன்னதாக அயாக்ஸில் (AFC Ajax) இருந்து மத்திய கள வீரர் பிரென்கி டி ஜொங், வலென்சியாவில் இருந்து கோல்காப்பாளர் நெட்ரோ மற்றும் பிரேசில் கழகமான அட்லெடிகோ-எம்.ஜி. பின்கள வீரர் எமர்சன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.  

ஏற்கனவே லியோனல் மெஸ்ஸி மற்றம் லுவிஸ் சுவேரஸ் போன்ற நட்சத்திர முன்கள வீரர்கள இருக்கும் பார்சிலோனாவில் கிரீஸ்மனின் வருகை அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<