பதக்க வாய்ப்பை தவறவிட்ட இலங்கை வீரர்கள்

Asian Games 2022

300

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வெல்லும் மற்றுமொரு அரிய வாய்ப்பு பறிபோனது.  

சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (29) ஆரம்பமாகின. 

இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே, மற்றும் அருண தர்ஷன ஆகியோர் தகுதிகாண் சுற்றில் முறையே 2ஆவது, முதலாவது மற்றும் 3ஆவது இடங்களைப் பிடித்து நேற்று (30) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றனர். 

இதன்படி, பெண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நதீஷா ராமநாயக்க 53.72 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து ஐந்தாவது இடத்தை பெற்றார். 

பெண்களுக்கான 400 மீட்டரில் ஆசிய சாதனை (48.14 செக்.) மற்றும் ஆசிய விளையாட்டு விழா சாதனைகளுக்குச் (50.09 செக்.) சொந்தக்காரியான பஹ்ரைனின் நாசர் சல்வா ஈத் நாசரை (50.92 செக்.) பின்தள்ளி சக நாட்டவரான கெமி அதெகோயா 50.66 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார் 

2014ஆம் ஆண்டு இன்சியோன் ஆசிய விளையாட்டு விழா 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் சட்டவேலி ஓட்டம் ஆகிய 2 போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்ற கெமி, 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதிப் போட்டியாளராகவும் இருந்தார். 

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக தரவரிசையில் 101ஆவது இடத்தில் உள்ள நதீஷா ராமநாயக்கவின் சிறந்த நேரப் பெறுமதி 52.61 செக்கன்களாகும் 

இதனிடையே, ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகிய இருவரும் முறையே 6ஆவது, 7ஆவது இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். 

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக தரவரிசையில் 54ஆவது இடத்தில் உள்ள அருண தர்ஷன, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியை 46.09 செக்கன்களிலும், உலக தரவரிசையில் 129ஆவது இடத்தில் உள்ள காலிங்க குமாரகே 46.22 செக்கன்களிலும் போட்டியை நிறைவு செய்திருந்தனர். இதில் இறுதியாக கடந்த 2018இல் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் அருண தர்ஷன 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ஆண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் ஆசிய சாதனை மற்றும் ஆசிய விளையாட்டு விழா சாதனைக்கு சொந்தக்காரராகிய சவுதி அரேபியாவின் மஷ்ரபி யூசுப் அஹமட், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியை 45.55 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார் 

2014 முதல் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்று வருகின்ற இவர், 2012 றியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

2006ஆம் ஆண்டிலிருந்து, ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு வீரரும் மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்றதில்லை. இறுதியாக 2006ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுசந்திகா ஜயசிங்க 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன், 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<