உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

681

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போட்டிகளை மாத்திரம் கருத்திற்கொண்டு வெளியிடப்பட்டுள்ள உலக வலைப்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி, 26ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது …

இதன்படி, தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள ஹொங்கொங் அணியை பின்தள்ளி இலங்கை அணி ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் பெறுபேறுகள் கருத்திற் கொள்ளப்படாமையினால், அந்த தொடரில் 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட சிங்கப்பூர் (21ஆவது இடம்) மற்றும் மலேஷியா (25ஆவது இடம்) ஆகிய அணிகளை விட இலங்கை பின்னிலையில் உள்ளது.

உலக வலைப்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசை 2008 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த வருடம் ஜுலை 2ஆம் திகதி புதிய தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு நாடுகளினதும் தேசிய அணிகள், தொடர்ச்சியாக பங்குபற்றி வருகின்ற சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற இந்தப் புள்ளிகள் பட்டியலானது, ஒரு அணியின் சராசரி செயல்திறனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு சர்வதேச போட்டியிலிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெறுகிறது. அவர்களது மதிப்பீடு விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்ட மொத்த புள்ளிகள் ஆகும். இதன்படி, உலக வலைப்பந்தாட்டத்தில் மிக உயர்ந்த மதிப்பீட்டைக் கொண்ட அணி முதலிடத்தையும், அடுத்த மிக உயர்ந்த மதிப்பீட்டைக் கொண்ட அணிகள் 2ஆவது, 3ஆவது இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதன்படி, 2015 ஜுலை முதல் 2018 ஜுன் வரையான 3 வருட காலப்பகுதியில் சிங்கப்பூர் அணி 43 போட்டிகளிலும், மலேஷியா மற்றும் ஹொங்காங் முறையே 14 மற்றும் 19 போட்டிகளிலும் விளையாடியிருந்தன. எனினும், குறித்த காலப்பகுதயில் இலங்கை அணி, ஆசிய தரப்படுத்தலில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகளுடன் குறைந்தபட்சம் 11 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தது. அதிலும், சிங்கப்பூர் அணி கடந்த இரண்டு வருடங்களில் 29 போட்டிகளில் விளையாடியது. ஆனால் இலங்கை 6 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றியிருந்தது. (மலேஷியா 12, ஹொங்காங் 15).

இது இவ்வாறிருக்க, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை அணி கைப்பற்றியது. அப்போது உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 14ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றுக்கொண்டது. எனினும், அதன்பிறகு தொடர்ச்சியாகப் பெற்ற தோல்விகள், போதியளவு போட்டிகளில் பங்குபற்றாமை உள்ளிட்ட காரணங்களால் இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

இதேவேளை, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 212 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் தரவரிசையில் இதுவரை காலமும் 2ஆவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை அதிர்ச்சி தோல்வியடையச் செய்த இங்கிலாந்து அணி (174 புள்ளிகள்), தற்போது ஒரு படி முன்னேறி 2ஆவது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது.

இதேநேரம், உலக வலைப்பந்தாட்டத்தில் மற்றுமொரு பிரபல அணியாக கருதப்படுகின்ற பிஜி தீவுகள் அணி, 7ஆவது இடத்தில் இருந்து 14ஆவது இடத்தை நோக்கி பின்தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க. ஒவ்வொரு அணிகளும் விளையாடுகின்ற போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தரப்படுத்தல்கள் இடம்பெற்றன. அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளில் (2017 முதல்) பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் தற்போது தரவரிசையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் கடந்த 2015 ஜுலை முதல் 2016 ஜுன் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போட்டிகளில் 50 சதவீதமான பெறுபேறுகள் இதில் நேரடியாக உள்ளடக்கப்படவில்லை.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு

சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9) நடைபெற்று …

எனவே, ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் முடிவிலும் முன்னைய ஆண்டுகளின் பெறுபேறுகள் கருத்திற்கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல, ஒவ்வொரு அணிக்கும் புள்ளிகள் இரண்டு முறைகளில் வழங்கப்படுகின்றன. தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணியுடன் போட்டியிட்டு வெற்றியோ, தோல்வியோ அல்லது சமநிலையில் போட்டியை நிறைவுசெய்தால் அதற்கேற்ப புள்ளிகள் வழங்கப்படும். மாறாக, ஒரு அணி வெற்றி பெற்றால் 50 புள்ளிகளைப் பெறும் அதேவேளை, தோல்வியை சந்தித்தால் 50 புள்ளிகளை இழக்கவும் நேரிடும்.

இந்த நிலையில், அடுத்த வருடம் இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட அணிக்கான விசேட பயிற்சிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச தெரிவித்துள்ளார்.

அதேபோல, இம்முறை ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அனைத்து வீராங்கனைகளையும் இந்தப் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எதிர்வரும் காலங்களில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிய அரங்கில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து உங்களது கருத்தங்களை இங்கே பதிவிடலாம். அதேபோல, இலங்கையின் வலைப்பந்தாட்ட எதிர்காலத்துக்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் உங்களுக்கு இங்கே தெரிவிக்க முடியும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…