இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!

1727

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நாளை (06) லீட்ஸ் – ஹெடிங்லேவ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரண்டு அணிகளதும் இந்த உலகக் கிண்ண பயணத்தில் இந்திய அணி இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியின் ஊடாக அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளதுடன், இலங்கை அணி மூன்று வெற்றிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடன் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

உலகக்கிண்ண தொடரின் மேற்கிந்திய……….

அதனால், அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்வதற்கான போட்டியாக இந்தப் போட்டி அமையாத போதும், மற்றுமொரு முக்கிய முடிவினை தரக்கூடிய போட்டியாக இலங்கை – இந்திய போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், முதல் இடத்தில் அவுஸ்திரேலிய அணி (14 புள்ளிகள்) உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அணி தங்களுடைய அடுத்த போட்டியில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியடைந்து, இந்திய அணியானது இலங்கையை வெற்றிக்கொண்டால், இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதனால், சொந்த மண்ணில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்வதைனை இந்திய அணி தடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. காரணம், இந்த உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியிடம் மாத்திரமே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. 

மேற்குறித்த இந்த காரணத்தால், சொந்த மண்ணில் இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்வதை இந்தியா தவிர்த்துக்கொள்ள எதிர்பார்க்கும் என்பதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் இங்கிலாந்தை சந்திக்க தயாராகலாம். எனவே, நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றியை உறுதி செய்து, புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதை எதிர்பார்பார்த்திருக்கும்.

Photo Album – CWC19 – Sri Lanka practice session ahead of India match

எனினும், அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்திருக்கும் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், சிறப்பான வெற்றியொன்றினை பதிவுசெய்திருக்கிறது. குறிப்பாக, விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்த இலங்கை அணியின் துடுப்பாட்டம் கடந்த போட்டியில் வலுப்பெற்றிருக்கிறது. ஆரம்பத் துடுப்பாட்டம், இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் மற்றும் மத்தியவரிசை வீரர்களின் பங்கு என்பவற்றை பார்க்கும் போது, இந்திய அணிக்கு சவால் கொடுக்கும் வகையில் இலங்கை அணி மாறியிருக்கிறது.

இவ்வாறு தங்களுடைய ஆட்டத்தில் முன்னேற்றங்களை கண்டிருக்கும் இலங்கை அணி, துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் மிகச்சிறந்த முறையில் தயாராகி இருக்கும் இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தாலும், வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்து நம்பிக்கையுடன் அடுத்தக்கட்டத்துக்கு தயாராக எதிர்பார்த்துள்ளது. 

அதேநேரம், நாளைய தினம் போட்டி நடைபெறவுள்ள ஹெடிங்லேவ் மைதானமானது, இலங்கை அணிக்கு அதிர்ஷடம் கொடுக்கும் மைதானமாக காணப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்து, இந்த மைதானத்தில் தங்களுடைய வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்திருக்கிறது. 

அதுமாத்திரமின்றி, இதே மைதானத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. குறித்தப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்திருந்த 322 என்ற வெற்றியிலக்கினை இலங்கை அணி 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க இலகுவாக அடைந்திருந்தது. அதனால், இந்த மைதானத்தில் பெறப்பட்டுள்ள சாதகமான முடிவுகளை நம்பிக்கையாகக் கொண்டு இலங்கை அணி நாளைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

இலங்கை மற்றும் இந்திய அணிகளது ஒட்டுமொத்த ஒருநாள் போட்டி புள்ளி விபரங்களை பார்க்கும் போது, இந்திய அணி மிக வலுவான ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது. இரு அணிகளும்  158 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 90 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், இலங்கை அணி 56 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 

ஆனால், இத்தகைய ஒருநாள் போட்டி மோதல்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணத் தொடர்களை பார்க்கும் போது, இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதை காண முடிகின்றது. உலகக் கிண்ணங்களில் 8 போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ள நிலையில், இலங்கை அணி 4 போட்டிகளிலும், இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி முடிவற்ற போட்டியாக அமைந்திருக்கின்றது.

அதுமாத்திரமின்றி 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இரண்டு அணிகளும் இருதரப்பு ஒருநாள் தொடர் மற்றும் எவ்வித ஒருநாள் போட்டிகளிலும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்பதுடன், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்றிருந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என வெற்றிபெற்றிருந்தது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

லசித் மாலிங்க

இலங்கை அணியை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்கள் கடந்த போட்டியிலிருந்து தங்களுடைய பணியை தொடங்கியுள்ள போதும், பந்துவீச்சு பக்கம் லசித் மாலிங்க மாத்திரமே விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளராக உள்ளார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சார்பாக  அதிக விக்கெட்டுகளை (12) மாலிங்க வீழ்த்தியுள்ளார். வேகம் குறைந்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறந்த நுணுக்கங்களுடன் செயற்படும் மாலிங்க, நாளைய போட்டியில் அணியின் பந்துவீச்சு துறுப்புச்சீட்டாக இருப்பார் என நம்பப்படுகிறது.

ஜஸ்பிரிட் பும்ரா

இந்திய அணிசார்பில் 59 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள ஜஸ்பிரிட் பும்ரா, அந்த அணியின் வேகப் பந்துவீச்சை வழி நடத்தும் முன்னணி வீரராக உள்ளார். இலங்கை அணியின் லசித் மாலிங்கவை போன்று யோர்க்கர் பந்துகளை சிறப்பாக வீசும் திறமையைக் கொண்டுள்ள இவர், இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.

எனினும், தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பும்ரா, ஏனைய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு உந்துகோலாக உள்ளார். அதனால், நாளைய போட்டியிலும் எதிர்பார்க்கக்கூடிய வீரராக பும்ரா உள்ளார்.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசாத ஜெப்ரி வெண்டர்சேவுக்கு பதிலாக திசர பெரேரா அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, லஹிரு திரிமான்னே, திசர பெரேரா, இசுரு உதான, லசித் மாலிங்க, கசுன் ராஜித

இதேவேளை, இந்திய அணியை பொருத்தவரை தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

ரோஹித் சர்மா, கே.எல்.ராஹுல், விராட் கோஹ்லி, ரிஷப் பாண்ட், மகேந்திரசிங் டோனி , ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா

ஆடுகளம் மற்றும் காலநிலை

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை விளையாடிய போது, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகம் கொண்டதாக ஹெடிங்வேலவ் ஆடுகளம் இருந்தாலும், நாளைய போட்டியை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும்.

அதேநேரம், நாளைய போட்டியில் மழைக் குறுக்கிடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்பதுடன் முழுமையான போட்டியொன்றை காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<