சதங்களில் சாதனை படைத்த விராட் கோஹ்லி

Indian Premier League 2023

77
Virat Kohli breaks Chris Gayles Record

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற கடைசி லீக் பேட்டியில் 61 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்து விராட் கோஹ்லி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது IPL போட்டிகளில் விராட் கோஹ்லி அடித்த 7ஆவது சதமாகும்.

இதன்மூலம் IPL போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி விராட் கோஹ்லி முதலிடத்தைப் பிடித்தார். அந்த வகையில் 6 சதங்களுடன் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்திலும், 5 சதங்களுடன் ஜோஸ் பட்லர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

நடப்பு IPL தொடரில் விராட் கோஹ்லி மொத்தம் 2 சதங்கள் குவித்துள்ளார். முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு பருவத்தில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடிய கோஹ்லி, 639 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது துடுப்பாட்ட சராசரி 53.25 ஆகும். இதில் 65 பௌண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், 2 சதங்கள் மற்றும் 6 அரைச் சதங்கள் இதில் அடங்கும்.

IPL கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 7,263 ஓட்டங்களை விராட் கோஹ்லி குவித்துள்ளார். அதன்மூலம் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் உள்ளார். மொத்தம் 643 பௌண்டரிகள் விளாசி அதிக பௌண்டரிகள் அடித்த துடுப்பாட்ட வீரர்ககளில் 3ஆவது இடத்தில் அவர் உள்ளார். 234 சிக்ஸர்கள் விளாசி அதிக சிக்ஸர்கள் பதிவு செய்த வீரர்களில் 5ஆவது இடத்தில் உள்ளார். 50 அரைச் சதங்கள் மற்றும் 7 சதங்களை கோலி இதுவரை IPL கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, ஒரு பருவத்தில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், டேவிட் வோர்னர் ஆகியோரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார். டேவிட் வோர்னர், கிறிஸ் கெயில் ஆகியோர் மூன்று தடவைகள் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ள நிலையில் விராட் கோஹ்லி தற்போது 2013, 2016, 2023 ஆம் ஆண்டுகளில் 600 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்தப் பட்டியலில் கேஎல் ராகுல் 4 தடவைகள் 600 ஓட்டங்களைக் கடந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<