பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சுபர் கிங்ஸ்!

IPL 2023

101

IPL தொடரில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய இறுதி லீக் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரகாசிப்பு மற்றும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்புகளுடன் சென்னை சுபர் கிங்ஸ் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கைக்வட் மற்றும் டெவோன் கொன்வே ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுத்தந்தனர்.

மீண்டும் நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பும் பிராவோ

இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்காக 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இதில் கொன்வே 52 பந்துகளில் 87 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ருதுராஜ் கைக்வாட் 50 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசினார்.

இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர் சிவம் டுபே 9 பந்துகளில் 22 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள சென்னை சுபர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் சேட்டன் சக்காரியா, கஹ்லீல் அஹ்மட் மற்றும் அன்ரிச் நோக்கியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை சுபர் கிங்கஸ் அணி நிர்ணயித்திருந்த பாரிய வெற்றியிலக்கை நோக்கிய டெல்லி அணிக்கு, ஆரம்பம் முதல் பந்துவீச்சில் தீபக் சஹார் அழுத்தம் கொடுக்க தொடங்கினார். இதன்மூலம் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

எனினும் அணிக்காக தனியாளாக ஓட்டங்களை குவிக்க டேவிட் வோர்னர் போராட, பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்த மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியை வெற்றியின் பக்கம் திருப்பினர்.

டேவிட் வோர்னர் 58 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். இவரையடுத்து அதிகபட்சமாக அக்ஷர் படேல் 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சஹார் 3 விக்கெட்டுகளையும் தீக்ஷன மற்றும் பதிரண ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இதேவேளை இந்தப் போட்டியில் 77 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அடுத்ததாக பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<