RCB அணியை IPL இல் இருந்து வெளியேற்றிய சுப்மன் கில்

Indian Premier League 2023

101

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஒப் சுற்றுக்கு 4ஆவது அணியாகத் தெரிவாக, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஒப் சுற்றிலிருந்து வெளியேறியது.

IPL தொடரில் நேற்று நடைபெற்ற 79ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோஹ்லி களமிறங்கினர். அணித்தலைவர் டு பிளெசிஸ் 28 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய கிளென் மெக்ஸ்வெல் (11 ஓட்டங்கள்), மஹிபால் லோம்ரோர் (ஒரு ஓட்டம்), மைக்கல் பிரேஸ்வெல் (26 ஓட்டங்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக் (டக்அவுட்) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

விக்கெட்டுகள் ஒரு புறம் வீழ்த்தப்பட்டாலும் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த அனூஜ் ராவத் இறுதியில் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். இதில் பொறுப்புடன் விளையாடிய விராட் கோஹ்லி சதம் விளாசி அசத்தினார். இம்முறை IPL தொடரில் 2ஆவது சதத்தையும், ஒட்டுமொத்தமாக 7ஆவது சதத்தையும் பதிவு செய்தார்.

அவர் 61 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 13 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 197 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரித்திமான் சஹா ஆரம்பத்திலேயே தடுமாறி 12 (14) ஓட்டங்களுடன் ஆட்டழிந்து சென்றாலும் இம்பேக்ட் வீரராக வந்த விஜய் சங்கர், சுப்மன் கில்லுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் கடந்த போட்டியில் சதமடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு அரைச் சதமடித்தார்.

இருவரும் 2ஆவது விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டு நம்பிக்கை கொடுக்க, விஜய் சங்கர் 7 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த தசுன் ஷானக டக் அவுட்டாகி சென்றார்.

அதனைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் 6 (7) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் தொடர்ந்து சிம்ம சொப்பனமாக மாறிய சுப்மன் கில் 5 பௌண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் இம்முறை IPL தொடரில் 2ஆவது தடவையாக சதமடித்து 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்து குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 198 ஓட்டங்களை எடுத்த குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இம்முறை IPL தொடரில் 10ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை கடைசி வரை தனதாக்கியது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேற, 16 புள்ளிகளை கைவசம் வைத்திருக்கும் மும்பை அணி பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்படி, சென்னையில் எதிர்வரும் செவ்வாயன்று (23) நடைபெறவுள்ள குவாலிபையர் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. புதனன்று (24) நடைபெறுகின்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பையை லக்னோ அணி எதிர்கொள்கிறது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<