இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் முஸாதெக் ஹுசைன்

Sri Lanka tour of Bangladesh 2022

120
Mosaddek

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் துடுப்பாட்ட வீரர் முஸாதெக் ஹுசைன் சைகாட்டை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணைத்துள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

>> மேஜர் லீக் T20 தொடர் மே மாதம் ஆரம்பம்

குறிப்பிட்ட இந்த குழாத்திலிருந்து சுழல் பந்துவீச்சாளர் மெஹிதி ஹாஸன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக மாற்று சுழல் பந்துவீச்சாளராக நயீம் ஹஸன் இணைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் முஸாதெக் ஹுசைன் இணைக்கப்பட்டுள்ளார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

முஸாதெக் ஹுசைன் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரமே இணைக்கப்பட்டுவந்தார். இருப்பினும், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் இவர் இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், நான்கு பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் போது, பின்வரிசையில் முஸாதெக் ஹுசைன் போன்ற துடுப்பாட்ட வீரர் ஒருவர் இருப்பது முக்கியமான ஒன்று எனவும் பங்களாதேஷ் தேர்வுக்குழு உறுப்பினர் ஹபிபுல் பஷார் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸாதெக் ஹுசைன் பங்களாதேஷ் அணிக்காக இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். இறுதியாக 2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

எனினும், இறுதியாக நடைபெற்ற டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 658 ஓட்டங்கள் மற்றும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனவே, மீண்டும் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு முஸாதெக் ஹுசைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி எதிர்வரும் 8ஆம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<