உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

11232

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்களில் அநீதி இழைக்கப்படுவது தொடர்பில் ஐசிசியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவரும், அணி முகாமையாளருமான அசந்த டி மெல் ”த டெய்லி நியூஸ்” ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை கார்டிப் மைதானத்தில் எதிர்கொண்டிருந்தது. இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான புற்கள் நிறைந்த (Green Pitch) ஆடுகளமாக அமைக்கப்பட்டிருந்தது.

உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்பின் தற்போதைய நிலை

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய ………..

எனினும், இலங்கை – ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின்னர், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இதே கார்டிப் மைதான ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக புற்கள் அகற்றப்பட்ட, (flat) ஆடுகளமாக வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் 200 ஓட்டங்கள் பெறுவதற்கு கடினமாக இருந்த போதும், இங்கிலாந்து அணி 386 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களையும் குவித்திருந்தது.

இந்த நிலையில், நாளை (15) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக அமைக்கப்பட்டுள்ளதாக அசந்த டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆடுகளம் புற்கள் அற்ற ஆடுகளமாக அமைக்கப்பட்டிருந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக  அமைந்திருந்தது. குறித்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 300 ஓட்டங்களை கடந்திருந்தன.

இவ்வாறு இருக்கையில், நாளைய போட்டிக்கான ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதை பார்க்கும் போது, ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயற்படுவது போன்று உள்ளது என அசந்த டி மெல் குற்றம் சுமத்தியுள்ளார். 

“ஓவல் மைதானத்தில் நாளைய போட்டிக்காக புற்கள் நிறைந்த (green pitch) ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு பகுதி அணிகளுக்கு ஒருவிதமான ஆடுகளத்தையும், மற்றைய பகுதி அணிகளுக்கு வித்தியாசமான ஆடுகளங்களையும் ஐசிசி வழங்குவது நியாயமற்ற விடயமாகும்.”

இதேவேளை, இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்களில் மட்டுமில்லாமல் ஏனைய சில வசதிகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துக்கு வழங்கப்படும் பஸ், வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் கார்டிப் மைதானத்தில் வழங்கப்பட்ட பயிற்சிக்கான வசதிகளிலும் குறைப்பாடு இருப்பதாகவும், குறித்த விடயங்கள் தொடர்பில் ஐசிசியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக ஐசிசியிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால், அவற்றுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும், எமக்கு பதில் கிடைக்கும் வரை நாம் எமது முறைப்பாடுகளை தெரிவிப்போம்” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளைய 5வது போட்டியில், அவுஸ்திரேலிய அணியை கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. 

இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் படி இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் இரண்டு கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<