ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற மொயின் அலி ஆஷஸ் தொடரில்

The Ashes 2023

233
Moeen Ali recalled for Ashes after agreeing Test

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலிரெண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், ஆஷஸ் தொடருக்கான முதலிரெண்டு போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து குழாத்தில் ஒரேயொரு அனுபவ சுழல் பந்துவீச்சாளராக ஜெக் லீச் பெயரிடப்பட்டார். எனினும், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஜெக் லீச்சிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால், ஆஷஸ் தொடரில் இருந்து அவர் விலகினார்.

இதற்கிடையில், ஜெக் லீச்சிற்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொயின் அலியை ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியது.

குறிப்பாக, மொயின் அலியை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பி வருமாறு கடந்த ஒரு வாரமாக அந்நாட்டு கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், அதை மொயின் அலி பரிசீலித்து வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலமுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு மொயின் அலி, தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாத்தில் மொயின் அலியை இணைத்துக் கொள்ள இங்கிலாந்து தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 2014 முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்த மொயின் அலி, ஒருநாள் மற்றும் T20i கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.

இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் அலி 5 சதங்கள் மற்றும் 14 அரைச் சதங்கள் என 2914 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேநேரம், பந்துவீச்சில் 5 தடவைகள் ஐந்து விக்கெட் பிரதியைப் பதிவு செய்துள்ள அவர், 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<