ICC மாதாந்த விருதுக்கு இரு இலங்கையர் பரிந்துரை

108

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மே மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து மற்றும் இளம் வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, கடந்த மே மாதம் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ICC நேற்று (06) வெளியிட்டுள்ளது.

அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், பங்களாதேஷ் அணியின் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மற்றும் அயர்லாந்தின் ஹெரி டெக்டர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து, ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் (Thipoatch Putthawong) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணியுனான தொடரில் வெளிப்படுத்திய ஆற்றல் காரணமாக இந்த விருதுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்,

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் 64 ஓட்டங்களைப் பதிவு செய்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சமரி, T20i தொடரின் மூன்று போட்டிகளிலும் தலா 30 ஓட்டங்களுக்கு மேல் குவித்தார்.

ICC இன் மே மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற இலங்கை வீராங்கனையான ஹர்ஷிதா சமரவிக்ரம, பங்களாதேஷ் தொடரில் நான்கு போட்டிகளில் (ஒரு ஒருநாள் மற்றும் மூன்று T20i) 170 ஓட்டங்களைக் குவித்தார்.

இதில் T20i தொடரில் 125 ஓட்டங்களைக் குவித்த அவர் ஒரு போட்டியில் மட்டும் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் அவர் முறையே 45, 29 மற்றும் 51 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார்.

எனவே, ICC இனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த வீரர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<