ஆஸி. அணியிலிருந்து விலகினார் ஹேசில்வுட்; நீசருக்கு வாய்ப்பு

86
Neser replaces Hazlewood in Australia's WTC final squad

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளார்.

இதனையடுத்து அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் மைக்கல் நீசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக திடீரென்று அணியில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெற்றிருந்தார். IPL தொடரின் இறுதிப் பகுதியில் பெங்களூர் அணிக்காக 3 போட்டிகளில் மட்டும் விளையாடினார்.

இருப்பினும், காயத்தினால் அவதிப்பட்டு வந்த அவர் IPL தொடரில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வந்தார். கடந்த சில நாட்களாக பந்து வீச்சுப் பயிற்சியில் ஜோஷ் ஹேசில்வுட் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த அவர், உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதிப் போட்டியில் களமிறங்குவார் என அவுஸ்திரேலியா அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், 100 சதவீத உடல்தகுதியுடன் இல்லாததால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ஹேசில்வுட் விலகியுள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆரம்பமாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் விலகியது அவுஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஹேசில்வுட்டுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் மைக்கல் நீசர் அவுஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயது வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான மைக்கல் நீசர், அவுஸ்திரேலிய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கவுண்டி சம்பியன்ஷிப்பில் கிளாமோர்கன் அணியில் இடம் பெற்றிருந்த மைக்கல் நீசர், இறுதியாக விளையாடிய 5 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில் யோர்க்ஷயார் அணிக்கு எதிராக 32 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதில் ஒரு சதத்தையும் அவர் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா அணி விபரம்

பெட் கம்மின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலான்ட், அலெக்ஸ் கேரி, கெமரூன் கிரீன், மார்கஸ் ஹரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், டொட் மர்பி, மைக்கல் நீசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<