சர்பராஸ் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவாரா? மிஸ்பாவின் வாக்குறுதி

917

பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து சர்பராஸ் அஹமட் நீக்கப்பட்டாலும், எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு தலைவரும், பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

சர்பராஸ் அஹமட்டின் தலைமையில் பாகிஸ்தான் அணி 2017இல் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. அந்த சமயத்தில், சர்பராஸ் அஹமட்டின் தலைமைத்துவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

>> உமர் அக்மலின் மேன்முறையீட்டை பரிசீலனை செய்யவுள்ள முன்னாள் நீதிபதி

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதற்கு சர்பராஸ் அஹமட் மற்றும் அணி வீரர்களின் மோசமான உடற்தகுதி தான் காரணம் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

அத்துடன், உலகக் கிண்ணத்தில் லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் அணிக்கு, அதன்பின்னரும் தொடர் தோல்விகளை சந்திக்க நேரிட்டது

குறிப்பாக, துடுப்பாட்ட வீரராகவும், தலைவராகவும் சொதப்பிவந்த சர்பராஸ் அஹமட், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார்

இதன்படி, மூன்றுவிதமான அணியின் தலைவர் பதவியிலிருந்தும் சர்பராஸ் அஹமட் நீக்கப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன், பாகிஸ்தான் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் பிரிவிலிருந்து பி பிரிவுக்கு அவர் தரமிறக்கப்பட்டார்.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை சீரடைந்ததும் பாகிஸ்தான் அணி, எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 25 பேர் கொண்ட அணியொன்று அங்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது

இந்த நிலையில், இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சர்பராஸ் அஹமட் நிச்சயம் விளையாடுவார் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவிக்கையில்,  

”சர்பராஸ் அஹமட் அதிக அழுத்தத்தில் இருந்ததால் தான் இலங்கை தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் தான் நிச்சயம் அணியின் முதன்மை விக்கெட் காப்பளர் தெரிவாக உள்ளார். அடுத்த தொடரில் நிச்சயம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக அவர் இடம்பெறுவார்.  

>> உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்

தொடர்ச்சியாக அழுத்தத்தில் இருந்ததால் அவருக்கு சிறிய ஓய்வு வழங்கப்பட்டது. அத்துடன் உடற்தகுதியைப் பேண அவர் கடுமையாக உழைத்துவருகிறார். எதிர்வரும் போட்டிகளில் நிச்சயம் மிகவும் உறுதியாக மீள்வருகையை கொடுப்பார்” என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<